சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? – மு.க.ஸ்டாலின் காட்டம்.!
விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் கைதை கண்டித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது சாத்தானின் ஆட்சியா என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைந்த்து முதல் திமுகவினர் மீது பல்வேறு வழக்குகள் வைத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தவெக. முன்னாள் அமைச்சர்கள் சிவசங்கர், எவ வேலு, செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் என அடுத்தடுத்து திமுகவின் முக்கிய முகங்கள் மட்டுமல்லாமல், திமுகவின் ஜென் ஸி அமைப்பை சேர்ந்தவர்களையும், தவெகவிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை தமிழ்நாடு காவல்துறையை ஏவி தவெக அரசு பழிவாங்குவதாக அறிவாலய வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், தற்போது திமுகவைச் சேர்ந்த மேலும் நபர் மீது தவெக அரசு கைவைத்துள்ளது. அதாவது, முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ., மார்கண்டேயனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மார்க்கண்டேயன்,” எங்களுடைய தலைவர்களை அவமரியாதை செய்தால் உங்களை அடித்து விரட்டவும் தயங்க மாட்டோம். சட்டமன்றத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கு எது பேசினாலும் அடிப்போம். எங்களைப் பார்த்தால் கோமாளி மாதிரி தெரிகிறதா? சட்டமன்றத்தை பூட்டினால் உனக்கு எலும்பு இருக்காது. யார் ஓடியது? கரூர் சம்பவத்தில் கைது பண்ணி விடுவார்கள் என இரவோடு இரவாக ஓடியது நீதான். பேயடிச்சவன் மாதிரி சட்டசபையில் முதலமைச்சர் விஜய் உட்கார்ந்து இருக்கிறார். கொத்து பரோட்டா போடுவேன் என சொல்கிறார். உன்னை மாதிரி ஆயிரம் பரோட்டாவைப் பார்த்தவன் நான்” என்று அவர் பேசி இருந்தார்.
மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், இன்று (ஜூலை 20) அதிகாலையே அவரை கைது செய்ய போலீசார் வீட்டிற்கு வந்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மார்கண்டேயன் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்,மார்க்கண்டேயனின் கைது தொடர்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்? என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences” என்று பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?