புதிய தலைமைச் செயலகம்.. ஜெ., எதிர்கொண்ட சவால்.. விஜய் அரசுக்கு காத்திருக்கும் சட்டச் சிக்கல்!
தமிழ்நாடு அரசியலில் புதிய தலைமைச் செயலகம் தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய் அரசுக்கு காத்திருக்கும் சட்ட சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பாக விரிவாக பார்ப்போம்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்துக்கான ஒருங்கிணைந்த வளாகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 25.55 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 8-ம் தேதி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பளவில், 15 தளங்களுடன் இந்த வளாகம் அமைய இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க பொதுப்பணித்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டதோடு கதை முடிந்துவிடவில்லை. பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதி என்பதால், கட்டுமானத்துக்கு முன்பாக பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை அனுமதிகளை அரசு பெற வேண்டிய நிலை உள்ளது.
கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கட்டுமானங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள Coastal Regulation Zone எனப்படும் CRZ விதிகள் இத்திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தற்போது தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு CRZ அறிவிக்கையின் விதிகளே நடைமுறையில் உள்ளன. 2019-ம் ஆண்டு புதிய CRZ அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், அதற்கான Coastal Zone Management Plan முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை 2011 விதிகளே பொருந்தும் என்று தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பட்டினப்பாக்கம் பகுதி தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட கடலோர மண்டல வரைபடங்களில், கடற்கரையை ஒட்டிய நகர்ப்புறப் பகுதிகள் CRZ-II வகைப்பாட்டில் இடம்பெற்றுள்ளன. எனினும், புதிய தலைமைச் செயலகத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து சர்வே எண்களும் முழுமையாக CRZ-II-க்குள் வருகின்றனவா என்பதை துல்லியமான திட்ட வரைபடத்தின் அடிப்படையில்தான் உறுதி செய்ய முடியும்.
மேலும், பட்டினப்பாக்கத்துக்கு அருகில் அடையாறு முகத்துவாரமும் இருப்பதால், கடலிலிருந்து மட்டுமல்லாமல் முகத்துவாரப் பகுதியின் தாக்கத்தையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் அதன் மிகப்பெரிய கட்டுமானப் பரப்பளவு. அறிவிக்கப்பட்டுள்ள 20 லட்சம் சதுர அடி என்பது சுமார் 1.86 லட்சம் சதுர மீட்டர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளின்படி, 1.50 லட்சம் சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுமானப் பரப்பளவு கொண்ட Township and Area Development திட்டங்கள் குறிப்பிட்ட சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைக்கு உட்படுகின்றன.
எனவே, இறுதித் திட்டத்திலும் இதே அளவு கட்டுமானம் தொடர்ந்தால், EIA விதிகளின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய சூழல் உருவாகலாம். இது மாநில அளவில் செயல்படும் SEIAA போன்ற அமைப்புகளின் பரிசீலனைக்கும் செல்லக்கூடியது.
இதனால், ‘திட்டம் தமிழ்நாடு அரசுடையது என்பதால் மாநில அரசே முடிவு செய்துவிடலாம்’ என்ற அளவில் இந்த விவகாரத்தை பார்க்க முடியாது. திட்டத்தின் அமைவிடம், CRZ வகைப்பாடு, கட்டுமானப் பரப்பளவு உள்ளிட்ட அம்சங்கள்தான் எந்தெந்த அனுமதிகள் தேவை என்பதை தீர்மானிக்கும்.
புதிய தலைமைச் செயலகம் என்றாலே தமிழ்நாட்டில் நடந்த பழைய அரசியல் முயற்சிகள் நினைவுக்கு வருவதாகக் கூறும் உள்விவரம் அறிந்தவர்கள், இதுதொடர்பாக ஜெயலலிதாவிற்கும் பல்வேறு சிக்கல்கள் இருந்ததாகக் கூறுகின்றன.
2003-ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முயன்றார். இதற்கு மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் போராட்டத்துக்கு அப்போது திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த மு.க.ஸ்டாலினும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே CRZ விதிகள் தொடர்பாக கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.
மத்திய அரசின் விதிமுறை மாற்றம் மாநில அரசின் அதிகாரத்தை பாதிப்பதாக ஜெயலலிதா சட்டப்பேரவையில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மாநில அரசின் கட்டுமானத் திட்டங்களில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிகளவில் தலையிடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
பின்னர் ராணி மேரி கல்லூரி திட்டம் கைவிடப்பட்டு, கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கும் சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான சட்டச் சிக்கல்கள் எழுந்தன.
ஜெயலலிதா காலகட்டத்துக்கும் தற்போதைய சூழலுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. 2003-ல் பெரிய கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான புதிய சுற்றுச்சூழல் விதிகள் வரைவு நிலையில் இருந்தன. ஆனால் தற்போது EIA Notification, 2006 நடைமுறையில் உள்ளது. அதனால், பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகம் CRZ விதிகளையும், அதன் கட்டுமான அளவுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைகளையும் கடக்க வேண்டியிருக்கும்.
மாநில அளவில் அனுமதி கிடைத்தாலும், சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் மத்திய அரசுக்கு குறிப்பிட்ட அதிகாரங்கள் உள்ளன. குறிப்பாக சுற்றுச்சூழல் விதிமீறல்கள் அல்லது அனுமதி நிபந்தனைகள் மீறப்படுவது கண்டறியப்பட்டால், சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆக, ரூ.1,200 கோடி திட்டம்... 25.55 ஏக்கர் நிலம்... 20 லட்சம் சதுர அடி கட்டுமானம் என பிரமாண்டமாக உருவாக இருக்கும் விஜய் அரசின் புதிய தலைமைச் செயலகத்துக்கு, அரசியல் சவால்களைவிட சுற்றுச்சூழல் மற்றும் சட்ட அனுமதிகளே அடுத்த பெரிய பரீட்சையாக இருக்கப் போகிறது!
2003-ல் ஜெயலலிதா எதிர்கொண்ட தலைமைச் செயலக சர்ச்சை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஆட்சியில் புதிய அத்தியாயமாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?