படம் OUT... பாட்டு HIT
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓமைனா மைனா!
இளையராஜா - வைரமுத்து கூட்டணிப்பாட்டு!
-வி.ராம்ஜி
கிளியின் பேச்சு இனிமை. மைனாவின் குரலும் இனிமை. கிளியைப் பற்றி மைனாவிடம் சொல்லும் ஒரு பாடலை இரண்டு குயில்கள் பாடியதைக் கேட்டிருக்கிறீர்களா? எஸ்.ஜானகியும் எஸ்பி.ஷைலஜாவும் இணைந்து பாடிய பாடலை எப்போது கேட்டாலும் ஆனந்தம், நமக்குள் ஊற்றெடுக்கும். ‘ஆனந்தக்கும்மி’ என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் படத்தை மறந்திருக்கலாம். ஆனால் பாடல் மனசுக்குள் இன்றைக்கும் கும்மியடித்துக்கொண்டே இருக்கிறது.
’ஆனந்தக்கும்மி’யில் நடித்தவர்கள் யார்? தெரியாது. இயக்கியவர் யார்? அதுவும் தெரியாது. ஆனால் இளையராஜா தயாரித்து இசையமைத்தார். கங்கை அமரன் பாடல்கள் எழுதிப் பாடவும் செய்தார். வைரமுத்து பாடல்களை எழுதி, படத்துக்கு வசனமும் எழுதினார் என்பவையெல்லாம் எனக்கு அப்படியே நினைவில் நிற்கின்றன.
’ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா’ என்ற அந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் ஒருமுறை கேட்டுவிட்டு, மீண்டும் ஒருமுறை, இன்னொரு முறை என ஐந்தாறு முறை கேட்டால்தான், எனக்கு நிம்மதி. அப்படிக் கேட்காவிட்டால், ‘காது இருந்தும் பயன்படுத்தவில்லை’ எனும் குற்றவுணர்வு வந்துவிடும்!
எஸ்.ஜானகி, எஸ்பி.ஷைலஜா இருவரும் பாடுகிற இந்தப் பாடலைக் கேட்டால், ‘இது இரண்டு தோழிகள் சேர்ந்து பாடுகிறார்கள்’ என்றுதான் நினைப்பீர்கள். ஆனால் ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பாடுகிற பாட்டு. அதாவது சிறுமியும் சிறுவனும் சேர்ந்து பாடுகிற பாட்டு. வைரமுத்துவின் வரிகள், இன்னும் ஜாலம் காட்டின.
ஒரு கிளி உருகுது…
உரிமையில் பழகுது…
ஓ மைனா மைனா…
குறும்புகள் தொடருது…
அரும்புகள் மலருது…
ஓ மைனா மைனா…
தளிரிது மலரிதுதானா…
இது ஒரு தொடர்கதை தானா…
தளிரிது மலரிதுதானா…
இது ஒரு தொடர்கதை தானா…
இரு மனம் இணையுது…
இரு கிளி தழுவுது…
ஓ மைனா… ஓ மைனா..!
பாடலின் ஆரம்ப இசையே நம்மை நிறுத்தி அட்டென்ஷன் மோடுக்குக் கொண்டுவந்துவிடும். ‘பாடும் பறவைகள்’ படத்தின் ‘கீரவாணி’ என்ற பாடலின் சாயலைக் கொண்ட இசை. ஒருவேளை இந்தப் பாடல் கீரவாணி ராகமோ என்னவோ? தெரியவில்லை. ஆனால் இரண்டுபேரின் குரல்களும் அந்த சரஸ்வதிதேவியின் அம்சமாகவே உணர்ந்தேன். இரண்டு சரஸ்வதிதேவியரா... என வியந்தேன்.
பாடலின் நடுவே வரும் பிஜிஎம் கொஞ்சம் ஹம்மிங், கொஞ்சம் புல்லாங்குழல், தடக்கென மிருதங்கம், தபேலா,ஸ்ட்ரிங்ஸ் என கலந்து குழைந்து இணைந்து துள்ளிக்குதித்து வரும். நம்மை அந்தச் சிறுவனுக்குள்ளும் சிறுவனுக்குள்ளும் கூடுபாயவைத்திருப்பார் இளையராஜா.
நிலவெரியும் இரவுகளில்…
ஓ மைனா… ஓ மைனா…
மணல் வெளியில் சடுகுடுதான்…
ஓ மைனா… ஓ மைனா…
கிளிஞ்சல்களே உலையரிசி…
இவளல்லவா இளவரசி…
கிளிஞ்சல்களே உலையரிசி…
இவளல்லவா இளவரசி…
என்று பாடி முடித்ததும்...
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்…
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது…
ஓ மைனா… ஓ மைனா…
என்று வரும்போது, இந்தச் சிறுவனும் சிறுமியும் கொஞ்சம் வளர்ந்திருப்பார்கள். கூடவே நமக்குள் ‘இவர்கள் வளர்ந்த பிறகு எதுவும் பிரச்னை இல்லாமல் இதேபோல் சேர்ந்திருக்கணுமே...’ என்று நான் குலசாமியையெல்லாம் துணைக்கு அழைத்து வேண்டிக்கொண்டேன்.
திருச்சி பொன்மலையில் ரயில்வே சினிமா என்ற தியேட்டர் இருந்தது. இருபது பைசா, நாற்பது பைசா, அறுபது பைசா டிக்கெட்டுகள். படம் தொடங்குவதற்கு முன்பு, இடைவேளையில் எல்லாம், ‘பாபி’, ‘ஆராதனா’ என்றெல்லாம் பாட்டு போடுவார்கள். இந்தப் படம் பார்த்தபோது இடைவேளையில், ‘மச்சானைப்பாத்தீங்களே’வும் ‘கேட்டேளா அங்கே அதைப் பாத்தேளா இங்கே’வும் போட்டார்கள்.
வைரமுத்துவின் காதல் வரிகள் இப்போதுதான் மெல்ல மெல்ல எட்டுப்பார்க்கும். ஆனால் அது காதல் என்பது இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் தெரியும். அவர்கள் ஜானகிக்கும் ஷைலஜாவுக்கும் சொல்லியிருப்பார்கள். பாவம் அந்தச் சிறுவனும் சிறுமியும். அது என்னதென்றே தெரியாமல் நட்புறவாடிக்கொண்டிருப்பார்கள்.
இலைகளிலும் கிளைகளிலும்…
ஓ மைனா… ஓ மைனா…
இரு குயில்கள் பேரெழுதும்…
ஓ மைனா… ஒ மைனா…
வயல்வெளியில் பல கனவை…
விதைக்கிறதே சிறு பறவை…
வயல்வெளியில் பல கனவை…
விதைக்கிறதே சிறு பறவை…
நீரோடை எங்கெங்கும் பூவாடை…
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது…
ஓ மைனா… ஓ மைனா… என்ற வரிகளின் போது அவர்களின் டீன் ஏஜ்க்கு வந்திருப்பார்கள். அவர்கள்தான் நாயகனும் நாயகியும்! இளையராஜா பயன்படுத்தியிருக்கும் தாளக் கட்டமைப்பும் இடையிடையே வருகிற இசையும் நம்மை வேறோரு இடத்துக்கு, தளத்துக்குக் கொண்டுசெல்லும். பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்பாக வரும் இடையிசை மிகவும் அற்புதமானது. மிக எளிய வாத்தியங்களின்மூலம் ஒரு ஊர்வலம் சென்றுவிட்டு, ராஜவீதியில் உலா வந்திருப்பார் இளையராஜா. பாடல் முழுவதும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தலையை, ஒரு ‘பல்லக்கு’ போல் ஆட்டவைத்திருப்பார்; அசைய வைத்திருப்பார்.
வயல்வெளிகளில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை எனும் வரிகளில், ஒரு வலியைச் சுமந்திருப்பார் வைரமுத்து. நாம் பாடலைக் கேட்டதும் அந்தச் சுமையை நம் மனதில் இறக்கிவைத்திருப்பார். ‘ஆனந்தக்கும்மி’யில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ஆறேழு பாடல்களும் மனதை அள்ளிக்கொண்டன. இந்தப் பாடல் கூடுதல் குல்கந்து.
இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். ஆனால் பார்க்க நினைக்காதீர்கள். படமாக்கப்பட்டதைப் பார்த்தால்,பாடல் தருகிற மென் சோகத்துடன் ‘என்னய்யா இப்படி எடுத்திருக்காய்ங்க’ எனும் சோகமும் சேர்ந்துவிடும். ‘ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா’ பாடலைக் கேளுங்கள். உங்கள் வீட்டுக்குள்ளேயே கிளிகளும் மைனாக்களும் குயில்களும் வந்து, சோபாவில் அமர்ந்தது போல் உணருவீர்கள்!