G Square மாப்பிள்ளை Vs லாட்டரி மருமகன்... மோதிக்கொண்ட தங்கம் தென்னரசு-நிர்மல் குமார்!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் நேற்று அறிவித்திருந்த நிலையில், அது தொடர்பான இன்றைய விவாதத்தின்போது தங்கம் தென்னரசு மற்றும் நிர்மல் குமார் இடையே மோதல் ஏற்பட்டு, சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்த விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தின் தொழில் முதலீடுகள் பாதிக்கப்படுமா என்பது குறித்து திமுக தரப்பிலிருந்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்த அரசு தரப்பு விவசாயிகளின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
பரந்தூர் விமான நிலையம் குறித்து திமுக கேள்வி
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ ஆஸ்டின், நாகர்கோவிலில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டும், ஆறு மாதங்களாகியும் பணிகள் தொடங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், த.வெ.க. அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிதாக எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பிய அவர், தொழில்துறை வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் என்றும், திமுக ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். “பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.
விமான நிலையமா? விவசாயிகளின் கண்ணீரா?” - ஆதவ் அர்ஜூனா
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “பரந்தூர் விமான நிலையமா அல்லது விவசாயிகளின் கண்ணீரா என்றால், எங்கள் தலைவர் முதலமைச்சர் விஜய் விவசாயிகளின் பக்கம்தான் நிற்பார்” என்றும், முதலமைச்சர் விஜய் ஏற்கனவே விமான நிலையத்திற்கான மாற்று இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கண்ணீருக்காகவே முதலமைச்சரின் முதல் பிரசாரம் அமைந்ததாகக் கூறிய ஆதவ் ஆர்ஜூனா,விவசாயிகளின் நலனுக்காக அரசு தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பரந்தூர் மட்டுமின்றி திருவண்ணாமலை மேல்மா பகுதி விவசாயிகளுக்கு எதிராகவும் முந்தைய திமுக ஆட்சியில் குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு விமான நிலையம் மட்டுமே முக்கிய காரணியாக இருக்காது என்றும், தொழில்துறை வளர்ச்சிக்கு சிங்கிள் விண்டோ சிஸ்டம் உள்ளிட்ட நிர்வாகக் கட்டமைப்புகள் முக்கியம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். முதலீடுகள் வருவதற்கு ஊழல் இல்லாத நிர்வாகமும் கட்டமைப்பும் தேவை என்றும், அதனை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
381 ஏரிகள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அரசு மேற்கொண்ட பொருளாதார வளர்ச்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமி பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதில் மாற்றுக் கருத்து இல்லை என தெரிவித்து, திட்டத்திற்காக சுமார் 5,740 ஏக்கர் நிலம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டு, அதில் பெரும்பாலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்றும், அவை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு மொத்தம் 5,846 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதாக தெரிவித்தார்.
இதில் 3,774 ஏக்கர் பட்டா நிலங்களும், மூன்று போகம் விளையக்கூடிய 2,681 ஏக்கர் விவசாய நிலங்களும் இருந்ததாக அவர் கூறினார். ஆனால், 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும், 48 சதவீதம் அதாவது 1,202 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாகவும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
“ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை” பேச்சால் அவையில் சலசலப்பு
தொடர்ந்து, பரந்தூர் பகுதியில் குறிப்பிட்ட சிலர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் பேசியபோது, “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை” என அவர் குறிப்பிட்ட கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“லாட்டரி மருமகன்” பேச்சால் அவையில் சலசலப்பு
இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று சொல்கிறீர்கள் என்றால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்கப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தங்கம் தென்னரசு தொடர்ந்து பேசுகையில், பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகே பரந்தூர் பகுதி விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். எந்த இடத்தில் விமான நிலையம் அமைத்தாலும் அங்கு விவசாய நிலங்கள் இருக்கும் என்றும், பொதுமக்களை இடமாற்றம் செய்யாமல் நிலத்தை கையகப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார். மேலும், தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது ரன்வே அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
“மக்களை பாதிக்காத வகையில் திட்டம்” – அமைச்சர் கீர்த்தனா
இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். மத்திய அரசு அனுமதி அளித்திருந்த நிலையிலும், சென்னை விமான நிலையத்தை ஏன் விரிவாக்கம் செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மாறி மாறி கருத்துகள் முன்வைக்கப்பட்டதால், சட்டசபையில் இன்றைய மானியக் கோரிக்கை விவாதம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பாகவும் அமைந்தது.
ஜி- ஸ்கொயர் மாப்பிள்ளை என்று அழைப்பதற்கு காரணம் என்ன?
ஜி-ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நிர்மல்குமார் விமர்சித்த நிலையில், ஜி-ஸ்கொயர் (G Square) நிறுவனத்திற்கும் திமுகவிற்கும் நேரடியான தொடர்பு இல்லை என்றாலும் மு.க.ஸ்டாலினின் மருமகனாக இருக்கக்கூடிய சபிரீசன் இந்நிறுவனத்துனோடு முன்னர் தொடர்பில் இருந்ததாகவும், ஒரு வேலை இதனை மையப்படுத்தி தான் நிர்மல் குமார் கூறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
லாட்டரி மருமகன் என்று அழைப்பதற்கு காரணம் என்ன?
நிர்மல்குமார் விமர்சனத்திற்கு பதலளித்த தங்கம் தென்னரசு லாட்டரி மருமகன் என்று சட்டசபையில் கூறியதற்கு பின்னே இருக்கும் காரணம் என்னவென்றால், ஆதவ் அர்ஜுனா, 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மகள் டெய்ஸியைத் திருமணம் செய்துள்ளார். இவரின் பெரும்பாலான தொழில் மற்றும் அரசியல் நகர்வுகளுக்கு இந்த லாட்டரி வணிகத்தின் நிதிப் பின்புலம் முக்கியக் காரணமாகப் பேசப்படுகிறது.ஒரு வேலை ஆதவை குறிப்பிட்டு தங்கம் தென்னரசு விமர்சித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
What's Your Reaction?

