வடலூர் வள்ளலார் சர்வதேச மையம்.. தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தர அரசுக்கு ஹைகோர்ட் ஆணை..!!

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Apr 24, 2024 - 17:10
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம்..  தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தர அரசுக்கு ஹைகோர்ட் ஆணை..!!

வடலூரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ள சத்ய ஞான சபை முன், 99 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், சர்வதேச மையத்தில் ஏற்படுத்தப்படவுள்ள 16 வசதிகளை விளக்கி தமிழக அரசு தரப்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. 

சர்வதேச மையம் அமையவுள்ள பகுதியில், தொல்லியல்துறை அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாகவும், அதில் 17, 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுற்றுச் சூழலின் எச்சங்கள் மட்டும் கண்டறியப்பட்டதாகவும் அந்த பகுதியில் எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.சாமன் தெரிவித்தார். மேலும் பணியின் போது ஏதேனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, தொல்லியத்துறை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டால் அவை பாதுகாக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

தொல்லியத்துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தால் தான் முறையாக இருக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், 3 பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படும் என தெரிவித்தார். 

இதனை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி அமர்வு, தொல்லியல் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். மேலும் வள்ளலார் மையம் அமைப்பதை எதிர்க்கும் வழக்குகளை, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow