எடப்பாடியின் எழுச்சிப் பயணம்: உளவாளியை இறக்கிய செந்தில் பாலாஜி!
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இதனை உன்னிப்பாக கவனிக்க தனியாக ஒரு டீமை இறக்கியுள்ளார் செந்தில் பாலாஜி.

பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்த எடப்பாடி, தமிழகம் முழுக்க பிரசாரச் சுற்றுப்பயணத்துக்கு திட்டமிடுகிறார்' என்று அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கே ஸ்கூப் நியூஸ் கொடுத்தது குமுதம் ரிப்போர்ட்டர் தான். நாம் குறிப்பிட்டபடி கிளம்பியேவிட்டார் எடப்பாடி.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக ரூட் மேப், பிரசார ஸ்கெட்ச் எல்லாம் போடப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 7ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 'மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம்!' என்று எழுச்சிப் பயணத்தை துவக்கியுள்ளார். பல கோடிகள் முதலீட்டில் தமிழகம் முழுக்க அவர் செல்லும் இந்த டூர் மூலம் யாருக்கு எழுச்சி கிடைக்கப் போகிறது என்பதுதான் கேள்வியே.
எடப்பாடி டீமில் பாலாஜியின் ஸ்பை:
எடப்பாடியின் எழுச்சி பிரசார பயணம் அறிவிக்கப்பட்ட நொடியிலேயே அலர்ட்டாகி விட்டார் செந்தில்பாலாஜி. எடப்பாடியின் பிரசாரத்தை ஃபாலோ செய்ய தனித்தனி நபர்கள் அடங்கிய ஒரு டீமையே உருவாக்கிவிட்டார். எடப்பாடியின் பேச்சில் சர்ச்சையான விஷயங்கள் ஏதாவது சிக்குகிறதா? என்று கவனித்து அவற்றை பாலாஜியின் ஐ.டி. விங்குக்கு உடனுக்குடன் அனுப்புகிறது இந்த டீம்.
மக்கள் பிரச்னையாக எடப்பாடி சுட்டிக்காட்டும் விஷயங்களில் தி.மு.க. ஆட்சியில் எத்தனை கோடிகள் செலவிடப்பட்டு எவ்வளவு தீர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பக்காவான ரிப்போர்ட்டை வீடியோவாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கூடவே எடப்பாடி கூட்டத்துக்காக பணத்துக்கு ஆட்களை வாகனத்தில் அழைத்து வருவதில் தொடங்கி, பாஜகவினரோடு மோதல், டாஸ்மாக்கில் ஒதுங்கும் அ.தி.மு.கவினர் வரை அத்தனையையும் பதிவு பண்ணுகிறது இந்த டீம்.
கூடிய விரைவில் இதை வைத்து பதிலடி தாக்குதல் நடத்தும் பிளானில் இருக்கிறார் பாலாஜி. இது இப்படியிருக்கும் நிலையில், 'நானும் விரைவில் சுற்றுப்பயணம் துவக்குகிறேன்' என்று சொல்லி எடப்பாடியின் எழுச்சி பயணத்தை பங்கம் பண்ணியிருக்கிறார் பன்னீர்.
திமுக பாணியில் எழுச்சிப் பயணம்:
ஸ்டாலின் நடத்திய 'நமக்கு நாமே' பிரசார ஸ்டைலில்தான் எடப்பாடியின் எழுச்சிப் பயணமும் இருப்பதாக பொதுவான ஒரு விமர்சனம் இருக்கிறது. அந்தந்த ஏரியாவின் தொழில் துறையினரை சந்திப்பது, விவசாயிகளிடம் குறை கேட்பது, காலை வாக்கிங்கில் வாக்காளர்களை சந்திப்பது என்று ஸ்டாலினின் தந்திரங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறார் இபி.எஸ்! என்று திமுகவினர் நக்கலடிக்கின்றனர். ஆனால், அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் ஒவ்வொரு தொகுதியாக பயணம் செய்து வருகிறார் எடப்பாடி.
மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் நடந்த சந்திப்பின்போது நான் இன்னைக்கும் விவசாயிதான். நிலத்துல பார் பிடிச்சு நடவு பண்றதுல துவங்கி அறுப்பை களத்துக்கு கொண்டாறது வரைக்கும் வேளாண்மை செஞ் சுட்டுதான் இருக்கேனுங்க இந்த ஆட்சி நம்மள மாதிரி விவசாயிங்களை நசுக்கி அழிக்குதுங்க. நாம கைகோத்தோம்னா இவங்களுக்கு முடிவுரை எழுதிப்போடலாமுங்க" என்று டைமிங்காக பேசி கைதட்டலை வாங்கினார். அதேபோல் கோவை உள்ளிட்ட அடுத்தடுத்த மாவட்டங்களில் தொழில் துறையினருடன் நடந்த சந்திப்புகளிலும் தி.மு.க. ஆட்சியின் சறுக்கல்களை விளாசித் தள்ளிவிட்டார். தி.மு.கவை மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளையும் விளாசி எடுக்கிறார் எடப்பாடி.
'கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் ஏதாவது முகவரி இருக்கா? இதில் முத்தரசன் எங்களை விமர்சிக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியோ தி.மு.கவுக்கு எதிராகவே குரல் எழுப்ப துவங்கிவிட்டது. திருமா மனதில் கூட்டணி ஆட்சி ஆசை, ஆனால் வெளியே நம்மை விமர்சிக்கிறார். இவ்வளவு குழப்பங்களை வெச்சிக்கிட்டு எங்கள் கூட்டணி பற்றி பேச அவர்களுக்கு என்ன அருகதை இருக்கு?" என்று போட்டுப் பொளந்திருக்கிறார் எடப்பாடி.
(கட்டுரையாளர்: எஸ்.ஷக்தி/ குமுதம் ரிப்போர்ட்டர் / 15.07.2025)
What's Your Reaction?






