அப்பா-மகன் இணைப்பு… மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்..?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை நம்பி அரசியல் பயணத்தை மேற்கொண்ட நிலையில், அவர் எங்களை நடுவழியில் கைவிட்டுவிட்டாரோ என்ற வேதனையும் அச்சமும் இருக்கிறது என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

அப்பா-மகன் இணைப்பு… மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்..?

கடந்த 2024 டிசம்பரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பொதுவெளியிலேயே அப்பா – மகன் இடையே மோதல் வெடித்தது.

அதன் பின்னர் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, கட்சியே இரண்டாக பிளந்தது. அப்பா என்றும் பாராமல் தன்னை அடித்த்தாக அன்புமணி மீது ராமதாஸ் குற்றம் சுமத்திய நிலையில், குடும்ப பிரச்னை கட்சி பிரச்னையாக உருவெடுத்தது.  

இதனைத் தொடர்ந்து அன்புமணி தலைமையிலான பாமக, பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. ராமதாஸ் தலைமையிலான பாமக தனித்துவிடப்பட்டது. 

இந்த தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த அன்புமணி தலைமையிலான பாமக சார்பாக போட்டியிட்ட சௌமியா அன்புமணி வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகியுள்ளார். 

இப்படி பல பிரச்னைகள் மத்தியில் அண்மையில் அப்பா – மகன் இருவரும் நேரில் சந்தித்து பேசி, ஒன்றிணைந்தது பாமகவினருக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது. ஆனால், கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், சேலத்தில் முன்னாள் எம்எல்ஏ அருள் தலைமையில் ராமதாஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருள், “ராமதாஸ் - அன்புமணி சந்திப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பல பொறுப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். அனைவரின் கருத்துகளையும் கேட்டு, சென்னையில் விரைவில் மீண்டும் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை எடுப்போம்” என்றார்.

மேலும், “ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் இணைந்திருந்தால் பாமக அரசியல் ரீதியாக வலுவாக இருந்திருக்கும். கட்சியின் வாக்கு வங்கி குறையாமல் இருந்திருக்கும். 10 முதல் 15 எம்எல்ஏக்கள் வரை வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. எங்களைப் போன்றவர்கள் சொத்துகளை விற்று பல கோடி ரூபாய் கடனில் சிக்கியிருக்க மாட்டோம். அந்த வேதனை இன்னும் நீங்கவில்லை” என்று தெரிவித்தார்.

“மாணவர் பருவத்திலிருந்தே டாக்டர் ராமதாஸ் மட்டுமே எங்களின் தலைவராக இருந்துள்ளார். தற்போது அவர் எங்களை நட்டாற்றில் விட்டுச் சென்றுவிட்டாரோ என்ற பயமும் வேதனையும் உள்ளது. எங்களின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து இரண்டு நாட்களில் அறிவிப்போம்” என்றும் அருள் கூறினார்.

அருளின் இந்த கருத்துகள் பாமக உள்கட்சி அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow