”விளம்பர வெறியை நிறுத்திக்கோங்க..” - அமைச்சருக்கு உதயநிதி அட்வைஸ்..!

அமைச்சர் கீர்த்தனாவின் பள்ளி ஆய்வு சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

Jul 6, 2026 - 21:15
”விளம்பர வெறியை நிறுத்திக்கோங்க..” - அமைச்சருக்கு உதயநிதி அட்வைஸ்..!

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவிகளுடன் கலந்துரையாடிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வின்போது மாணவிகளிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்விகள் எழுப்பினார். அதற்கு சில மாணவிகள் பதிலளிக்க முடியாமல் இருந்த நிலையில், அங்கிருந்த ஆசிரியையிடம் அவர், “லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்” என்று தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையான நிலையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பதிவு பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தது.

அதில், “தான் நினைப்பதுதான் சரி எனப் பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல; அமைச்சரின் பணியும் அதுவல்ல. மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து ‘Last Bench’ என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள்”  என்று அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ குறித்து முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவிட்டு இருந்தார். 

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் கீர்த்தனா மீது இணையத்தளவாசிகள் மட்டுமல்ல, சாமானிய மக்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு அமைச்சராக பொறுப்புடன் செயல்பட்டு இருக்க வேண்டும் என்றும், அமைச்சரின் கருத்து குழந்தைகள் மத்தியில் தாழ்வுமனப்பான்மையை உருவாக்கும் என்றும், இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் குழந்தையின் முகத்தைக் கூட மறைக்காமல் அதனை பப்ளிசிட்டிக்காக செய்தியாக வெளியிட்டுள்ளது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், அமைச்சரின் செயல் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.

மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.

நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow