போதைப்பொருள் வைத்திருந்த வட மாநில தொழிலாளி கைது
வட மாநில தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பூவிருந்தவல்லியில் போதைப்பொருள் வைத்திருந்த மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வடபழனியில் இருந்து பூவிருந்தவல்லி வரை மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.இதில் ஏராளமான வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பூவிருந்தவல்லியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனுருல்லாஹ்(33), முஜிபுர் ரஹ்மான்(44) என்ற ஆகிய இரு தொழிலாளர்களிடம் போதைப்பொருள் இருப்பதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் அருகே பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில் ரூ.30,000 மதிப்புள்ள மெஸ்கலைன் என்ற போதை பவுடர் அனுருல்லாஹிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்த போலீசார் அவரிடமிருந்து அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
இந்த போதை பொருளை எரிப்பதால் வரும் புகையை சுவாசிப்பதால் போதை ஏற்படும் என்றும், இந்த பவுடரை திரவமாக்கி ஊசி மூலம் செலுத்துவதாலும், போதை ஏற்படும் என்று கூறப்படுகிறது.இதில் அனுருல்லாஹ் என்பவர் வட மாநிலங்களில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து இங்குள்ள வட மாநில தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி மது விலக்கு போலீசார் அனுருல்லாஹை கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?