ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் அக்குபங்சர்..!
கொரோனா பெருந்தொற்றின் கோர பிடியிலிருந்து தப்பித்துப் பிழைத்துத் தொலைந்த நம் ஆரோக்கியத்தை எங்கு தொலைத்தோம்? எப்படி தொலைத்தோம் என்று இன்று தேடிக்கொண்டிருக்கும் மணித்துளிகளில்தான் நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்ட கூட்டம், செல்வத்தை ஓடி ஓடித் தேடி இறுதியில் பெற்றது செல்வம் மட்டுமல்ல பலவித நோய்களும்தான். அதன் முக்கியக் காரணம் உரிய நேரத்தில் உண்ணாததும் உறங்காததும்தான். அவை, நோய்களை ஏற்படுத்தாமல் இருக்குமா? செல்வத்தைக் கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் சில நோய்களைத் தீர்க்க முடியாத ஒரு காலகட்டத்தில்தான் நாம்வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
சராசரி மனிதன் முதல் சாகச மனிதன் வரை இன்று ஆரோக்கியத்தை எப்படி தேடுவது? எங்கு தேடுவது? நோயின்றி வாழ வழிதான் என்ன? என்று கேள்விகளைக் கேட்டு சலித்துப்போன நிலையின் தன்மைக்கு அவர்களைத் தள்ளிவிட்டது யார்? 'வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்' என்று ஆயிரத்தில் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறோம் ஆனால், இன்று ஒட்டுமொத்த உலகமே இதைச் சொல்லிக் கொண்டு சலிப்புடன்தான் சுழன்றுகொண்டிருக்கின்றது.
'எதைத் தின்றால் பித்தம் தீரும்' என்று ஆரோக்கியத்தில் அதிக அக்கறைஎடுத்துக்கொண்டு யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே செய்து ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டு பின் அக்கரைக்கு இக்கரை பச்சையாய் தேடுதலில் முழுநேரத்தையும் செலவழித்துவிட்டுப் பின் கடந்த நேரத்தையும், காலத்தையும் திரும்பிப்பார்த்து திடுக்கிட்டு நின்று ஐயோ இத்தனை காலத்தை தேடுதலிலேயே செலவழித்துவிட்டோமே என்று திக்குத் தெரியாத காட்டில் நிற்போர் பலர்.
தேனை சுவைத்தவனுக்குத்தான் தேனைப்பற்றிப் பேச தகுதி உண்டு என பலர் சொல்லக் கேள்வி. ஆனால், நோய் பற்றிப் பேச நோயாளியாகத்தான் இருக்கவேண்டுமென்று அர்த்தமாகிவிடாது. அந்த நோயைத்தீர்ப்பவனுக்கும் தகுதி உண்டென்று சொன்னால் அது மிகையாகாது. நோய் பல வடிவங்களில் பல இன்னல்களைத் தந்துகொண்டிருக்கின்றது. நம் திருவள்ளுவர் கூறியதுபோல் நோய் என்றால் என்ன? நோய் ஏன் வந்தது? நோயின் காரணகர்த்தா யார்? அதை எப்படித் தீர்ப்பது போன்ற வினாக்களுக்கு விடை தெரிந்த ஒரு மருத்துவம் கிடைக்கப்பெறின் அந்த மருத்துவ முறையால்தான் தொலைந்த நம் ஆரோக்கியம் மீட்டெடுக்கப்படும். அம் மருத்துவம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம் அதை யார் வேண்டுமானாலும் புரியலாம். அப்படிப்பட்ட ஒரு மருத்துவத்தை மாற்றுமுறை மருத்துவங்களில் ஒன்றான அக்குபங்சரில் காணமுடிகிறது.
மதத்தைப் போலத்தான் மருத்துவமும். அனைத்து மதமும் சொல்வது ஒரே ஒரு கருத்துதான். இலக்கு ஒன்றுதான் ஆனால், அடையும் முறைதான் வேறுபடும். அதேபோல் அனைத்து மருத்துவ முறைகளும் பாடுபடுவது நோயைத் தணிப்பதற்காகத்தான். ஆனால், முறைகள்தான் மாறுபடும். யார் யாருக்கு எம்முறை பொருந்துமோ அதை அவரவர் பின்பற்றலாம், பயன்படுத்திக்கொள்ளலாம். நம் நோக்கம் நோயின்றி வாழ்வது. நோய் கலைந்து வாழ்வது. வருமுன் காப்பது புத்திசாலித்தனம் என்றால், வந்தபின்பு போராடி நலம்பெறுவது அதனினும் புத்திசாலித்தனம்.
அக்குபங்சர் எனும் அரியவகை மருத்துவ முறையில் நோய் கண்டறியப்பட்டு, அது வந்ததற்கு காரணமும் தெரிந்துகொண்டு பின் அந்நோயைக் களையும் நுட்பமும் கையாளப்படுவதால்தான் பல தீராத நோய்களும் கட்டுப்படுகின்றன. கடலளவு நீண்ட இந்த அக்குபங்சர் முறை பற்றி அறிந்தவர் சிலரென்றால் அறியாதவர் பலர். நம் வாழ்க்கை முறையுடன் பின்னிப் பிணைந்திருப்பதுதான் இம் மருத்துவத்தின் சிறப்பு, இவ்வுலகம் பஞ்ச பூதங்களாலானது என்பதை அனைவரும் அறிவர். நம் உடலிலும் இந்த பஞ்சபூத சக்தி அடக்கமென்பது எத்தனை பேருக்குத் தெரியும்? எளிமையாகச் சொல்வதென்றால், 'எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்' என்கிற பாமரனின் வார்த்தையைப்போல்தான். அதில்அறிவியல் உண்மை உண்டென்று சொன்னால் வியப்பாய்த்தான் இருக்கும்.
இதே தத்துவம்தான் அக்குடங்சர் மருத்துவ முறையில் கையாளப்படுகின்றது. பாதம் எரிகிறது எரிகிறது என்று பாத எரிச்சல் பிரச்னை உடைய ஒருவரை எப்படி குணப்படுத்துவது? எரிகின்ற பாதத்தை நீரில் நீண்ட நேரம் வைத்துப் பார்த்தால்கூட எரிச்சல் போகாது. மாறாக எரிச்சல் ஏன் ஏற்பட்டது? அந்த எரிச்சலை ஏற்படுத்தகூடிய உறுப்பு நம் உடலில் எது? அதை எப்படி தணிப்பது என்பதை அக்குடங்சர் தெரிந்தவரால் மட்டுமே தீர்க்க முடியும். நெருப்பைக் குறைக்க நீரை அதிகரிக்கவேண்டும். இத் தாத்பர்யம் மிகவும் எளிமையானது. இதை வைத்துக்கொண்டு உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்திசெய்ய முடியும்.
அக்குபங்சர் மருத்துவ முறையில் மருந்து மாத்திரைகளுக்கு இடமே இல்லை. எனவே, பக்கவிளைவுகள் இல்லவே இல்லை. வெறும் வலிகளுக்கு மட்டும்தான் இந்த அக்குபங்சர் மருத்துவமுறை பயன்படும் என்று பரவலான பேச்சு உண்டு. தலை முதல் கால் வரை ஏற்படக்கூடிய அனைத்துவிதமான நோய்களுக்கும் தீர்வு உண்டென்பதுதான் இதன் சிறப்பு.
உடல், ஆன்மா, மனம் மூன்றையும் இணைத்துத்தான் அக்குபங்சர் தீர்வு தருகிறது. மனத்தில் ஏற்படக்கூடிய கோபம், பயம், சந்தோஷம், துக்கம், கவலை அனைத்தும் உடலைப் பாதிக்கும். உடலுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட மனத்துக்குத்தான் சிகிச்சை அளிக்கும் இந்த அக்குபங்சர் மருத்துவ முறை. அக்குபங்சர் எனும் மாற்றுமுறை மருத்துவத்தின் பலன் குறைந்தபட்ச மக்களையே போய் சேர்ந்துகொண்டிருப்பது மனவேதனை. பலரும் இதன் பலனைப் பெறவேண்டும் என்பதே இதன் சாதனை. ஆரோக்கியம் தொலையாமல் இருக்கவும் இது உதவி புரியும், தொலைந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் இது துணைபுரியும் இயற்கையின் வரம்தான் இம்மருத்துவம்
What's Your Reaction?













