வாஸ்து சென்டிமென்டால் முதல்வர் அலுவலகம் மாற்றமா?
தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இதற்கு இடநெருக்கடி காரணாமா? அல்லது வாஸ்து காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை சமாளிக்கும் வகையில், முதலமைச்சர் விஜயின் அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய நிர்வாகப் பிரிவுகளை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணைப்படி, நிர்வாக செயல்பாடுகளை மேலும் விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் மேற்கொள்ளும் நோக்கில் இந்த இடமாற்றம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, முதலமைச்சர் அலுவலகம், அவரது செயலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் அனைத்தும் இனி 10-வது தளத்தில் இருந்து செயல்படும். இதன் மூலம் கோப்புகள் பரிமாற்றம், ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் முக்கிய நிர்வாக முடிவுகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த இடமாற்றத்திற்கு அதிகாரபூர்வமாக இட நெருக்கடியே காரணம் என அரசு விளக்கம் அளித்திருந்தாலும், அரசியல் வட்டாரங்களில் வேறு காரணங்களும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
விஜய்யின் ராசியான கடகராசி, ஜல ராசி என்பதால், அவர் கடலைப் பார்க்கும் வகையில் அலுவலக அறை இருப்பது பல நன்மைகளைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும் கடகராசி, மற்றும் கன்னி லக்னம் என்ற அமைப்பின் அடிப்படையிலும், அவருக்குத் தற்போது நடந்துகொண்டிருக்கும் சுக்ரதசையின்படியும் அவருக்கு கிழக்கு, வடக்கு, வடகிழக்கு திசைகள் ராசியானவையாக இருக்கும்.
மேலும், தலைமைப் பதவியில் இருப்பவர்கள் உயர்வான இடத்தில் இருந்து, பரந்த கடலைப் பார்ப்பது அவர்களது மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றும். அதன் காரணமாக அவர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுப்பது சாத்தியமாகும் எனவும் புராதன ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
அந்த அடிப்படையிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் அந்தக் கால மன்னர்கள் கடற்கரையை ஒட்டித் தங்கள் அரண்மனைகள், கோட்டைகளை அமைத்துக்கொண்டதாகவும் வரலாறுகள் சொல்கின்றன.
இத்தகைய காரணங்களின் அடிப்படையில் முதல்வர் விஜய், தனது ராசிப்படி கடற்கரையை நோக்கிய இடமும், கிழக்கு திசையை நோக்கி அமைந்த அலுவலகமும் சாதகமான பலன்களை அளிக்கும் என்றும், அது நிர்வாகத்தை திறம்பட நடத்த உதவும் என்றும் அவருக்கு ஜோதிட ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-ஜென்மயானந்தா
What's Your Reaction?