டெஸ்ட் மேட்ச் ஆட காத்திருக்கும் மழை… வெதர்மேன் கொடுத்த அப்டேட்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மழைப்பொழிவு மிக மிக மெதுவாக நகரும் என்று தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

Oct 15, 2024 - 17:24
டெஸ்ட் மேட்ச் ஆட காத்திருக்கும் மழை… வெதர்மேன் கொடுத்த அப்டேட்..!

நேற்றிரவு முதல் சென்னை உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இது இன்னும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முக்கியமாக அக்.17 அல்லது 18ம் தேதி மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னைக்கு இன்று முதல் ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். முன்னதாக அக்.16ம் தேதி மட்டுமே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது, இன்று ஆரஞ்ச் அலர் விடுத்திருந்தது. ஆனால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், சென்னை மழை நிலவரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

அதில், ”சென்னையில் அடுத்தச் சுற்று கனமழை சிறிது நேரத்தில் துவங்கும். காலை மழையைப் போலவே மாலையும் தீவிர மழைப் பொழிவு இருக்கும். இது ஐந்து மணி வரை நீடிக்கலாம். இதனால் அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரம் வீடு திரும்புவது நல்லது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மிக அதிக கனமழை பெய்யக் கூடும். 20 செ.மீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது. இதனால் சென்னையில் மின்சாரம் தடை படலாம். இதனிடையே, நேற்று (அக்.14) பெய்த மழையுடன் கீழைக்காற்று துவங்கியது. இதனால் காற்றின் திசை மாறுபடத் தொடங்கிவிட்டது. மேற்கு காற்று முடிந்து கிழக்கு திசைக் காற்றும் மேகமும் நகர்கிறது. இது நாளை (அக்.16) மாலை அல்லது இரவுதான் சென்னை அருகே கடற்கரையை நெருங்கும்” என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் கூறியுள்ளனர். 

தொடர்ந்து பேசிய தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், “வருகிற மழைப்பொழிவு மிக மிக மெதுவாக நகரும் என்பதால், சென்னை கடற்கரையை நெருங்க கால தாமதம் ஆகலாம். இந்த மழை வலுவிழக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அது தீவிரமாக வலுப்பெற்று வருவதாகத் தெரிகிறது. மேலும், வங்கக் கடல் வெப்ப நிலை மழைக்கு சாதகமாக இருக்கிறது. இடியும் மின்னலும் மிரட்டினாலும் அவை இயல்பானதாக இருக்கும். முக்கியமாக இந்த வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை எதிர்பார்க்கப்பட்ட மழை, செவ்வாய் முதல் வெள்ளியாக மாறக்கூடும். இது டி20 கிரிக்கெட் மாதிரி இல்லாமல், நிலைத்து நின்று நீண்ட டெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow