புதுச்சேரி: சிறுமி கொலை - காவல் அதிகாரிகள் ஆயுதப்படைக்கு மாற்றம்
ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் கண்ணன் முத்தியால்பேட்டை காவல்நிலையத்திற்கு மாற்றம்
சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அலட்சியத்துடன் செயல்பட்டதாக முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கோரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமி காணாமல் போன வழக்கில் அலட்சியமாக இருந்த முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரிகளை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர் தன செல்வம் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக, ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் அரியாங்குப்பம் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் முத்தியால்பேட்டை காவல்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?