கோடை சீசனுக்கு தயாராகும் உதகை... சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பு.. பைக்காரா படகு இல்லம் சாலையை மூடிய வனத்துறை

Apr 16, 2024 - 12:37
கோடை சீசனுக்கு தயாராகும் உதகை... சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பு.. பைக்காரா படகு இல்லம் சாலையை மூடிய வனத்துறை

கோடை சீசனுக்கு நீலகிரி மாவட்டம் தயாராகி வருகிறது. சாலை அமைக்கும் பணி காரணமாக இன்று முதல் 30 ஆம் தேதி வரை உதகை பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் துவங்குவது வழக்கமான ஒன்று. இச்சமயங்களில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, சமவெளி பிரதேசங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வார்கள்.

குறிப்பாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வரும் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக பைக்காரா படகு இல்லம் திகழ்ந்து வருகிறது. பைக்காரா படகு இல்லத்திற்கு கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டும்.

அந்த இரண்டு கிலோமீட்டர் சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக இருக்கிறது. அதன் காரணமாக வெயில் காலங்களில் தூசி பறப்பதும், மழை காலங்களில் சேரும், சகதியுமாக மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அந்தச் சாலையை சீரமைக்க வனத்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

தற்போது சாலையை சீரமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதால், இன்று 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow