அம்பேத்கர், பெரியார் பெயரை நீக்கிய தவெக? அரசியலா? அலட்சியமா? விசிக கேள்வி..!

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள இடஒதுக்கீடு வரலாறு தொடர்பான பகுதியில், பெரியார், அம்பேத்கர் மற்றும் நேரு ஆகியோரின் பெயர்கள் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Aug 29, 2026 - 13:30
அம்பேத்கர், பெரியார் பெயரை நீக்கிய தவெக? அரசியலா? அலட்சியமா? விசிக கேள்வி..!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ஒவ்வொரு துறையின் சார்பிலும் அந்தத் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கும் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கான இந்த ஆண்டின் கொள்கை விளக்கக் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள ‘இடஒதுக்கீட்டின் வரலாறு’ என்ற பகுதியில், தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டுகளில் இடம்பெற்றிருந்த சில முக்கிய வரலாற்றுக் குறிப்புகள், குறிப்பாக பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பங்களிப்புகள் தொடர்பான குறிப்புகள் இந்த ஆண்டு ஆவணத்தில் இடம்பெறவில்லை என விசிக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் வெளியான கொள்கை விளக்கக் குறிப்பில், 1951ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழல் விரிவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கண்டன இயக்கங்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தில் பிரிவு 15(4) சேர்க்கப்படுவதற்கான முக்கிய பின்னணியாக அமைந்ததாக அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரும் , அரசியல் சாசனத் தந்தையான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் பங்களிப்பும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது தவெக அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கொள்கை விளக்கக் குறிப்பில் அந்த வரலாற்றுப் பகுதியில் பெரியார், அம்பேத்கர் மற்றும் நேருவின் பெயர்கள் மட்டுமின்றி, நீதிக்கட்சியின் பெயரும் இடம்பெறவில்லை என விசிக பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வரலாற்றை இருட்டடிப்பு செய்வதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருந்த சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டு வரலாற்றில் இருந்து முக்கிய தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், புதியதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை இதற்கு நேரடியாக பொறுப்பாக்க முடியாது என்றும், துறை சார்ந்த அரசு செயலாளர் மற்றும் அவரை வழிநடத்தும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோரே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் சிந்தனைசெல்வன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

https://x.com/sinthanaivck/status/2093522960833531911?s=20

பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அரசின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் இடம்பெறும் வரலாற்று தகவல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது வழக்கம் என்றும், அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களில் மட்டுமே தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரலாற்றை அரசியல் வசதிக்கு ஏற்ப எழுதவோ, நீக்கவோ முடியாது என தெரிவித்துள்ள சிந்தனைசெல்வன், சமூகநீதிக்கான பயணம் என்பது ஒரு குறிப்பிட்ட அரசு அல்லது கட்சியின் சாதனை அல்ல, பல தலைமுறைகளின் போராட்டத்தின் விளைவு என்றும் கூறியுள்ளார்.\

Image

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனடியாக தலையிட்டு, கொள்கை விளக்கக் குறிப்பில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், வரலாற்றுத் தகவல்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசிக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்திற்கு காரணமான அரசு தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அரசு செயலாளர் ஆகியோர் உரிய விளக்கம் அளித்து மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சிந்தனைசெல்வன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தமிழ்நாடு அரசின் கூட்டணி கட்சிகளுக்குள்ளும் புதிய விவாதத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே சில நிர்வாக முடிவுகள் தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் மீது கூட்டணி கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், தற்போது இடஒதுக்கீட்டு வரலாற்றில் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாத விவகாரத்திலும் விசிக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow