“என் தந்தையை இழந்துட்டேன்” – சாலமன் பாப்பையா மறைவு குறித்து சீடர்கள் உருக்கம்!

தமிழ் இலக்கியத்தையும் சமூகக் கருத்துகளையும் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையா மறைவுக்கு பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா உள்ளிட்டோர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Sep 11, 2026 - 15:34
“என் தந்தையை இழந்துட்டேன்” – சாலமன் பாப்பையா மறைவு குறித்து சீடர்கள் உருக்கம்!

தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக தனது 90-வது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் ஓய்வில் இருந்து வந்த அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1936ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் பிறந்த சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியங்களையும் சமூகக் கருத்துகளையும் சாமானிய மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் கொண்டு சென்றவர். பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டிருந்தார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாலமன் பாப்பையா, திருக்குறள் கழகம் மற்றும் கம்பன் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பட்டிமன்றங்களை நடத்தி தமிழ் இலக்கியத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றார்.

பட்டிமன்றக் கலையை சாமானிய மக்களிடம் பிரபலப்படுத்தியதில் சாலமன் பாப்பையாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களை மட்டுமின்றி, சாதாரண மக்களின் வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள் மற்றும் முற்போக்குக் கருத்துகளையும் நகைச்சுவையுடன் மக்களின் மொழியில் பேசியவர்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதை 2000ஆம் ஆண்டு பெற்ற சாலமன் பாப்பையா, தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலமாக தமிழ்நாடு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே மாறினார். அவரது பட்டிமன்றங்களில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் தொடர்ந்து பங்கேற்று வந்தனர்.

தந்தையை இழந்துவிட்டேன்... பாரதி பாஸ்கர் உருக்கம்

சாலமன் பாப்பையாவின் மறைவு குறித்து பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் கண்ணீருடன் உருக்கமாகப் பேசினார். “என்னுடைய தகப்பனை இழந்து நிற்கிறேன். கடவுள் என்றால் அவர் தான். எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, ‘பாரதி மேடைக்கு வரவில்லை என்றால் இனி நான் மேடைக்கு வரமாட்டேன்’ என்று அவர் கூறினார். எங்களுக்கு அவர் அளித்த ஆதரவால் நாங்கள் மிகப்பெரிய புகழை அடைந்தோம். அதை பார்த்து அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அவருடைய பெருந்தன்மை அளவிட முடியாதது. எல்லா சமயங்களும் ஒன்றுதான் என்பதையே வாழ்நாள் முழுவதும் தனது செய்தியாகக் கொண்டிருந்தார். ‘ஒரு கடவுள்தான், ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள்’ என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்பார்.

இனி அந்த இடத்திற்கு யார் வர முடியும் என்று தெரியவில்லை. அவருக்கு முன்பும் யாரும் இல்லை; அவருக்குப் பின்பும் யாரும் வர முடியாது. தமிழ் இலக்கியத்திற்கும் பட்டிமன்றத்திற்கும் அவர் செய்ததைப் போல் யாராலும் செய்ய முடியாது. அவர் விட்டுச் சென்ற இடம் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், “அவரின் ஆன்மா எங்களை என்றும் ஆசீர்வதிக்கும் என்று நம்புகிறேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த இழப்பில் இருந்து எப்படி மீண்டு வருவோம் என்றும் தெரியவில்லை” என பாரதி பாஸ்கர் கண்ணீருடன் கூறினார்.

“என் வாழ்க்கையே அவரின் நினைவுதான்” – ராஜா

சாலமன் பாப்பையாவின் மறைவு குறித்து பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவும் உருக்கமாகப் பேசினார்.

“என் வாழ்க்கையே அவரின் நினைவுதான். அவர் இல்லாமல் நான் இல்லை. தமிழ்ச் சமூகத்துடன் பல வழிகளில் அவர் இணைந்திருந்தார். தொலைக்காட்சி வழியாக இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சென்றார். பட்டிமன்றம் என்ற கலையை மக்களிடம் கொண்டு சென்றார்.

குடும்பங்கள் அவரை தங்களது வீட்டில் ஒருவராகவே பார்த்து வந்தனர். ஒரு வாரத்திற்கு முன்புகூட ஒரு பட்டிமன்றத்தை நடத்திக் கொடுத்தார். திடீரென இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. நன்றாக இருந்தவர்; காலையில் இப்படி நடந்துவிட்டது. இந்தச் செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடந்த 50 ஆண்டுகளாக சாலமன் பாப்பையாவுடன் இருந்திருக்கிறேன். எளிமை என்றால் அவர் தான். ஒருநாளும் தன்னைப் பெரிய மனிதராகக் கருதியதே கிடையாது. சிறு குழந்தைகளைக்கூட அரவணைத்து பேசக்கூடியவர். எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்பி, கடைசி வரை அப்படியே வாழ்ந்தவர். அவரைத் தமிழ்ச் சமூகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்” என்று தெரிவித்தார்.

தமிழ் இலக்கியத்தையும் பட்டிமன்றத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற முக்கிய ஆளுமையான சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் உலகில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow