"சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம்தான் காரணம் என பழி கூறமுடியுமா?" - சனாதன வழக்கில் நீதிபதி கேள்வி!
வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை, தொழிலின் அடைப்படையில் உருவாக்கப்பட்டது - நீதிபதி
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், அமைச்சர் உதயநிதிக்கு குட்டு வைத்துள்ளார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனவும் டெங்கு, மலேரியா போல்தான் சனாதனம் எனவும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று (மார்ச் 6) விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட முடியாது எனக் கூறி நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்தார்.
அதேநேரம், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது தவறானது என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார். மேலும், வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை, தொழிலின் அடைப்படையில் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சமூகத்தின் சுமூகமான செயல்பாடுகள் மற்றும் முக்கிய தேவைகளின் அடைப்படியில் வர்ணாசிரமம் வடிவமைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சனாதனம் என்பது அழிவற்ற, நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால், சனாதனம் குறித்து நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறானது என நீதிபதி கூறினார். நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம்தான் காரணம் என பழி கூறமுடியுமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், சாதி அடிப்படையிலான பிளவுகள் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி அனிதா சுமந்த், இத்தகைய தீமைகளை ஒழிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அது முழுமையான புரிதலுடன் இருக்க வேண்டும், எந்த ஒரு நம்பிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது என நீதிபதி அனிதா சுமந்த் தனது தீர்ப்பில தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?