உதயநிதியை பதவி நீக்கம் செய்ய அவசியமில்லை... சனாதன வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்...

தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் பொது வெளியில் இப்படி பேசுக் கூடாது - உதயநிதிக்கு நீதிபதி கண்டனம்

Mar 6, 2024 - 16:59
உதயநிதியை பதவி நீக்கம் செய்ய அவசியமில்லை... சனாதன வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்...

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய விவகாரத்தில், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் எம்.பி. ஆ.ராசா ஆகியோரை பதவி நீக்கம் செய்ய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்தாண்டு செப்.2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனவும், டெங்கு, மலேரியா போல் தான் சனாதனமும் எனவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது பேசும் பொருளானது. 

அமைச்சரின் இந்த கருத்துக்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வகையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வரும் திமுக எம்பி ராசா மீதும், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோருக்கு எதிராகவும் இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சனாதனம் குறித்து அமைச்சர்கள் மீது நாடு முழுவதும் உள்ள வழக்குகளில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை,  அதனால் இந்த வழக்கிலும் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தது. வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் பொது வெளியில் இப்படி பேசுக் கூடாது என எச்சரித்தது. வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு அளித்து வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

சில தினங்களுக்கு முன்பு சனாதன வழக்கில், இதே கருத்தை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் எச்சரித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் அமைச்சர் பேசியது தவறு தான் எனக் கூறியிருப்பது, உதயநிதிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow