மேடை சரிந்து திடீர் விபத்து - நடிகை பிரியாங்கா மோகனுக்கு காயம்

சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளேன் என்பதை என் நலன் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்

Oct 3, 2024 - 18:47
மேடை சரிந்து திடீர் விபத்து - நடிகை பிரியாங்கா மோகனுக்கு காயம்

பிரபல நடிகை பிரியங்கா மோகன் தெலங்கானாவில் பங்கேற்ற  நிகழ்ச்சி ஒன்றில் மேடை சரிந்து காயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் முதலில் தெலுங்கு படங்களில் தான் நடித்து வந்தார். நடிகர் ஞானியின் தெலுங்கு படமான கேங் லீடர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் 2021ம் நெல்சனின் டாக்டர் படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடத்திருந்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு டான் படத்தில் ஜோடியாக நடித்தார். இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்து சூர்யா, தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ள பிரதமர் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இந்த நிலையில், தெலங்கானாவில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்டார். அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்து கீழே விழுந்தார். சட்டென சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர். இதில் பிரியங்கா மோகனுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் பிரியங்கா மோகன் விபத்தில் சிக்கியதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடயே நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,  “இன்று தொரூரில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டது. தற்சமயம் நான் நலமாக இருக்கிறேன். சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளேன் என்பதை என் நலன் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow