சாதி- பிரிவினைவாத கருத்துகளை கடத்துவதில் பெண்களின் பங்கு அதிகம்- இயக்குநர் தமயந்தி!
”சாதி வன்முறை மற்றும் பிரிவினைவாதக் கருத்துகள் ஆண்களிடம் மட்டுமே அதிகம் இருப்பதாக திரைப்படங்கள் சித்தரிக்கின்றன. ஆனால், உண்மை என்னவென்றால் அது பெண்களிடமும் மிக அதிகமாக இருக்கிறது” என இயக்குநர் தமயந்தி பேசியுள்ளார்.

ஜெ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'காயல்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அறிமுக இயக்குநரும் எழுத்தாளருமான தமயந்தி இயக்கியுள்ள இப்படத்தில், லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விழாவில் இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையமைத்த பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டன.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன், "நான் அமெரிக்காவில் வசிப்பதால், கதையை நேரில் கேட்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால், இயக்குநர் தமயந்தி அனுப்பிய ஸ்கிரிப்டை படித்ததும், இந்தப் படத்தை நாம் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படித் தொடங்கியதுதான் 'காயல்' திரைப்படம். படக்குழுவினரை நான் இன்றுதான் நேரில் பார்க்கிறேன். ஒரு நல்ல கதை அதற்கான இடத்தைத் தானே வந்தடையும். இந்த நல்ல கதையும் அப்படி ஒரு தயாரிப்பாளரை வந்தடைந்துள்ளது. இன்னும் பல நல்ல கதைகளைத் திரைப்படமாக்க ஜெ ஸ்டுடியோ தயாராக உள்ளது. 'காயல்' தமிழில் பெரிய வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்" என்றார்.
இயக்குநர் தமயந்தி பேசுகையில், "இந்தக் கதை என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு. சாதி வன்முறை மற்றும் பிரிவினைவாதக் கருத்துகள் ஆண்களிடம் மட்டுமே அதிகம் இருப்பதாக திரைப்படங்கள் சித்தரிக்கின்றன. ஆனால், உண்மை என்னவென்றால், அது பெண்களிடமும் மிக அதிகமாக இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக இந்த எண்ணங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் பெண்களின் பங்கு அதிகம். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் 'காயல்'. இந்தக் கதையைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் அவர்களுக்கு என் நன்றிகள். லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
படத்தின் கதாநாயகன் லிங்கேஷ் கூறுகையில், "என் சினிமா வாழ்க்கையில் இது மிக முக்கியமான திரைப்படம். இந்தப் படம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து யோசித்து நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தேன். தனது சொந்த வாழ்வில் நடந்த சம்பவங்களைத் திரைப்படமாக்க முயற்சி எடுத்த இயக்குநர் தமயந்தியின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். ஒரு பொறுப்பான படத்தில் நடித்ததில் எனக்குப் பெரிய திருப்தி உள்ளது" என்றார்.
நடிகை அனுமோல் பேசுகையில், "இயக்குநர் தமயந்தி இந்தப் படத்தின் கதையை எனக்கு தயாரிப்பாளர் முடிவாவதற்கு முன்பே கூறிவிட்டார். அப்போது நான் மலையாளப் படங்களில் பிஸியாக இருந்தேன். அப்போதே நான் இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று வாக்குறுதி அளித்தேன். சொன்னது போலவே, படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் நடிக்க வந்துவிட்டேன். படப்பிடிப்பு பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்றதால், அது புதுமையான பயண அனுபவத்தைத் தந்தது. இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. இப்படி பெண்களின் மனதிலுள்ள இன்னொரு பக்கத்தைச் சொல்லத் துணிந்த இயக்குநர் தமயந்திக்கு எனது பாராட்டுகள்" என்றார்.
இந்த விழாவில் இயக்குநர்கள் மித்ரன் ஜவஹர், மீரா கதிரவன், ட்ராட்ஸ்கி மருது, அதிஷா, இசையமைப்பாளர் ஜஸ்டின், எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?






