ரவுடியாக உதயா.. போலீஸாக அஜ்மல்: ’அக்யூஸ்ட்’ சினிமா விமர்சனம்
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற உதயா, அஜ்மல் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ . இப்படத்திற்கான குமுதம் விமர்சனம் காண்க.

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'அக்யூஸ்ட்'. இப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்ததா? இல்லையா? எப்படியிருக்கிறது படம் என்பதை காண்போம்.
போலீஸ் காவலில் இருக்கும் ஒரு விசாரணைக் கைதியைக் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். அந்தக் கைதிக்குப் பாதுகாப்பாக ஒரு போலீஸ் டீம் செல்கிறது. அதே சமயம், போகிற வழியில் அந்தக் கைதியைக் கொலை செய்வதற்கு ஒரு ரவுடிக் கும்பல் திட்டம் போடுகிறது; கூடவே போலீஸும் அந்தக் கைதியை என்கவுன்ட்டர் செய்யத் திட்டம் போடுகிறது. இதை மீறி அந்தக் கைதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டாரா? அப்படி அவர் செய்த குற்றம் என்ன, ஏன் செய்தார்? என்பதுதான் கதை. இயக்கம், பிரபு ஸ்ரீநிவாஸ்.
கைதியாக ஏ.எல்.உதயா கலக்கியிருக்கிறார். ரவுடிகளுக்கான வழக்கமான பாடி லாங்வேஜ், மேனரிசம் எதுவும் இல்லாமல், இயல்பாக நடித்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது. தன் முன்னாள் காதலியின் கணவனை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றப் போய் அவன் எதிர்பாராமல் இறந்துவிட பதறுவதாகட்டும். காதலியின் குழந்தையின் சிகிச்சைக்கு உதவி செய்ய இன்னொரு கொலைப் பழியைச் சுமப்பதாகட்டும் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருக்கிறார்.
உதயாவின் காதலியாக வரும் ஜான்விகா, கேரக்டருக்கு பொருத்தம். ரொமான்ஸ் காட்சிகளில் அவரது எக்ஸ்பிரஷன்ஸ் செம ஹாட். உதயாவின் சகோதரியாக வரும் தீபா பிரமாதம். லாட்ஜ் மேனேஜராக வரும் யோகிபாபு காமெடியில் நக்கல் தூக்கல். போலீஸ்காரராக வரும் அஜ்மல் அசத்துகிறார். அவருடைய வெகுளித்தனம், வீரம், கட்டிக்கப் போகும் காதலியுடன் போனில் ரொமான்ஸ் என எல்லாமே ரசிக்கும்படி உள்ளது. ஒளிப்பதிவு, இசை தரம்.
கிளைமாக்ஸ் ட்விஸ்ட் எல்லாமே யூகிக்கும்படி இருப்பது மைனஸ். காதலனால் கை வெட்டப்பட்டவனையே காதலி கல்யாணம் செய்து கொள்வது, கொஞ்சம் அபத்தம்.
What's Your Reaction?






