விஜய்க்கு அட்வைஸ்... அண்ணாமலைக்கு வார்னிங்... எஸ்.வி.சேகர் அதிரடி!
தவெக ஆட்சியின் வெற்றி, விஜய்யின் அரசியல் மற்றும் அண்ணாமலையின் எதிர்காலம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை இருந்தவரை அவரை பொளந்துக் கட்டியவர்களில் முதலிடத்தில் இருந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர். இதனால் தி.மு.க. பொதுக்கூட்ட மேடைகளில் துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்ட அவர், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, 'அரசியலே வேண்டாம்' என ஒதுங்கிவிட்டார். நாடகத்தில் மட்டும் தற்போது கவனம் செலுத்தி வருபவரிடம் அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம்.
தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. சாதிக்கும் என்பதை கணிக்கத் தவறியது ஏன்?
"த.வெ.கவின் வெற்றி எதிர்பாராத ஒன்று. அதிகபட்சமாக 10 தொகுதிகளை வெல்லும் என நினைத்தேன். ஆனால், சோஷியல் மீடியா வாயிலாக அவர்கள் மேற்கொண்ட பிரசாரம் மாபெரும் வெற்றிக்கு கை கொடுத்திருக்கிறது. விஜய்யே கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டார். 60 ஆண்டுகாலமாக தமிழகத்தில் நடந்த இரு துருவ ஆட்சிகளுக்கு மத்தியில் த.வெ.க.வுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருப்பதை மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்."
தி.மு.க., அ.தி.மு.கவின் செல்வாக்கை த.வெ.க. சரித்துவிட்டதே?
"தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்புதான். அரசியலில் பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுவதைவிட பிடிக்காதவர்களை எதிர்த்து ஓட்டு போடுவதுதான் அதிகம். அப்படித்தான் இப்போதும் நடந்திருக்கிறது. மயிலாப்பூர் தொகுதியில் நானும், நடிகர் நெப்போலியனும் போட்டியிட்டபோது ஹீரோ, காமெடியன் என எல்லோரும் பிரித்துப் பார்த்தனர். ஆனால் முடிவில் என்னைத்தான் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தனர்."
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால், அவரையும் மக்கள் வெற்றிபெற வைத்திருப்பார்களா?
"கண்டிப்பாக 1996ல் ரஜினிகாந்த் மீது மக்களுக்கு அளவுக்கு அதிகமான ஈர்ப்பு இருந்தது. அப்போது மட்டும் அவர் அரசியலுக்கு வந்திருந்தால், எப்போதோ தமிழக அரசியல் மாறியிருக்கும். விஜய்யைவிட அதிக இடங்களை கைப்பற்றி ரஜினிகாந்த் முதல்வராகி இருப்பார். ஜெயலலிதாவையே எதிர்த்தவர் என்ற மிகப்பெரிய 'இமேஜ்' அவருக்கு இருந்தது. ஆனால், அதை மிஸ் பண்ணிவிட்டார். பிறகு 2017ல்கூட அரசியலுக்கு வருவதாக அவரே சொன்னார். அப்போதும் அவர் அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் பின்வாங்கிவிட்டார்"
ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள த.வெ.க.வுக்கு இன்னும் அரசியல் அனுபவம் தேவைப்படுகிறதா?
"அரசியல் என்பதே அனுபவம்தான். அது வெறும் கணிதம் கிடையாது. எட்டு கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் இன்னும் மெக்கானிஸம் மாறவில்லை. மெக்கானிக்குகள் மட்டுமே மாறியுள்ளனர். 'எனது ஆட்சியில் லஞ்சம் கிடையாது' என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது. ஆனால், லஞ்சத்தை யாராலும் ஒழிக்க முடியாது. வேண்டுமானால் குறைக்க முடியும். விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்சத்தை வெளிப்படையாகக் கேட்பது குறைந்திருக்கிறது. லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வாழ எல்லோராலும் முடியும். நான் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, என் தொகுதியில் 300 கோடி ரூபாய்க்கு வேலை நடந்தது. ஆனால் நான் ஒரு பைசாகூட கமிஷன் வாங்கியதில்லை."
த.வெ.க.வின் நூறு நாள் ஆட்சி திருப்திகரமாக இருக்கிறதா?
"100 நாட்களை கணக்கிட்டு சொல்ல ஆட்சி நிர்வாகம் என்பது சினிமா அல்ல. அவர் ஐந்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும். முதல்வர் விஜய்யைப் பொறுத்தவரை, அவருக்கு பணம் தேவையில்லை. ஆனால், சிலர் செலவு செய்துவிட்டு அதிகாரத்துக்கு வந்துள்ளனர். எனவே அவர்களுக்கு சம்பாதிக்கும் எண்ணம் இருக்கலாம். குறிப்பாக வாக்கு கேட்கும்போது நடந்து சென்று மக்களை சந்தித்தவர்கள் இப்போது கார் கேட்கிறார்கள்."
அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெற வாய்ப்பிருக்கிறதா?
"நிர்வாகிகள் மட்டுமே தாவுகிறார்கள். தொண்டர்கள் அல்ல. அ.தி.மு.க. இதோடு முடிந்துவிட்டது என நினைக்கக் கூடாது. எடப்பாடியை அண்டர் எஸ்டிமேட் செய்வது தவறானது. நான்கு தொகுதிகளில் வென்ற கட்சி 184 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. எனவே அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. ஆட்சி மாற்றம் என்பது அரசியலில் சகஜம்"
அண்ணாமலையின் புதிய அமைப்பு எடுபடுமா?
"அண்ணாமலை 'வீ தி லீடர்ஸ்' அமைப்பை துவங்கி இருக்கிறார். லீடர் என்றால் ஒருவர்தான் இருக்கவேண்டும். அத்தனை பேரும் லீடர் என்றால் அது சின்னாபின்னமாகிவிடும். தனக்கு சமமாக இன்னொருவரை பார்க்கும் எண்ணம் அண்ணாமலைக்கு கிடையாது. போருக்கு போகும்போது ஆளுக்கு ஒரு கத்தி எடுத்துக்கொண்டு போவார்கள். ஆனால் அண்ணாமலை கையில் ரெண்டு சுத்தியை வைத்துக்கொண்டு உடன் இருப்பவர்களை வெட்டிக்கொண்டே செல்வார். எனக்குத் தெரிந்து அவர் கடைசியில் காங்கிரஸிடம் அடைக்கலம் ஆவார்."
முதல்வர் விஜய்க்கு உங்கள் அட்வைஸ் என்ன?
"விமர்சனங்களை அனுமதிக்க வேண்டும். நமது கோபம் பலவீனத்தை வெளிப்படுத்தும். எனவே, பொறுமையைக் கடைபிடித்து எதிர்க்கட்சியினர் என்ன சொல்கிறார்கள் என்பதை முதல்வர் விஜய் கவனிக்க வேண்டும். சிலர் சொல்வதை சாந்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். த.வெ.க.வை பொறுத்தவரை அதிகாரத்தை வைத்து வேண்டுமானால் சபையில் தி.மு.க.வினரை டைவர்ட் செய்யலாம். அனுபவத்தை வைத்து செய்ய முடியாது. இதை விஜய் உணர வேண்டும். தி.மு.கவினரை வெல்வதற்கு ஒரே வழி, சரியான பாதையில் விஜய் செல்வதுதான்?
பா.ஜ.க.வில் அரசியல் பணியை தொடர்கிறீர்களா?
"நான் சோவின் சீடன். சோ என்னுடைய மானசீக குரு. எனவே, நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இன்றுவரை அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். பிரதமர் மோடியின் நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் வீட்டில் இன்னமும் மோடி படத்தை நான் அகற்றவில்லை. ஆனால், பா.ஜ.கவில் தொடர விருப்பமில்லை."
What's Your Reaction?