டெல்லி கொடுத்த கிரீன் சிக்னல்? அடித்து ஆடும் செந்தில்பாலாஜி!

சட்ட ரீதியான நெருக்கடிகளைத் தாண்டி மீண்டும் அரசியல் வேகத்தை கூட்டியுள்ள செந்தில்பாலாஜி, கரூர் இடைத்தேர்தலில் முக்கியப் பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது.

Sep 2, 2026 - 21:13
டெல்லி கொடுத்த கிரீன் சிக்னல்? அடித்து ஆடும் செந்தில்பாலாஜி!

ஆளுங்கட்சியின் தீவிர வழக்கு வேட்டையால் அமைதியாக இருந்துவந்த செந்தில்பாலாஜி, டெல்லியில் இருந்து கிடைத்த கிரீன் சிக்னலால் அடித்து ஆட ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள். இதே வேகத்தில் கரூர் இடைத்தேர்தலையும் அவர் பரபரப்பாக்குவார் என சொல்லப்படுவதுதான் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி கரூருக்கு வந்த முதல்வர் விஜய், குதிரை பேர வழக்கில் செந்தில்பாலாஜியையும், அவரின் சகோதரர் அசோக் குமாரையும் போலீஸ் தேடி வருவதைக் குறிப்பிட்டு, 'ஓடு.. ஓடு... ஓடு... வர்றான் பாரு வேட்டைக்காரன்' என்று கலாய்த்தார். இதற்கு பதிலடி தந்த செந்தில்பாலாஜி, 'கரூர் சம்பவம் நடந்த அன்று ஓடு... ஓடு... ஓடு... என யார் ஓடினார்கள் என்று மக்களுக்குத் தெரியும்' என்று முதல்வரைக் கலாய்த்தார். இப்படி ஆளுங்கட்சிக்கு அவ்வபோது அவர் பதிலடி கொடுத்துவந்தாலும், அதில் எல்லாம் அவரது பழைய வீரியம் இல்லை என விமர்சனம் எழுந்தது. கூடவே, சமீபகாலமாக அவர் தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் இருக்கிறார், விரைவில் அணி மாறப்போகிறார் எனவும் தகவல்கள் பரவி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டின.

அவ்வளவுதானா செந்தில்பாலாஜி என குரல்கள் எதிரொலித்தபோது, திடீரென கடந்த வாரம் சட்டசபையில் ஸ்டாலினையும், உதயநிதியையும் வெகுவாகப் புகழ்ந்து பேசிய செந்தில்பாலாஜி, ஆளுங்கட்சியை நேரடியாகவே அட்டாக் செய்தார். 'மின்வாரிய தலைமை அலுவலகத்தில், திருட்டுப்போன ஹார்ட் டிஸ்க் 18, ஆனால் கைப்பற்றப்பட்டதோ 32, 'அரசு அமைத்து மூன்று மாதம் ஆகிறது, ஆனால் மின்வாரிய அமைச்சர் ஒரு எஸ்.ஈ. மீட்டிங்கூட போடவில்லை. பிறகு எப்படி உங்களால் மின்வெட்டை தடுக்க முடியும்? என அடுத்தடுத்து மின் துறையில் நடக்கும் குளறுபடிகளை புட்டு புட்டு வைத்தார்.

தொடர்ந்து பொதுவெளியிலும்கூட, 'முதலமைச்சர் மேஜையில் மூன்று ஃபைல்கள் இருப்பதாக சொல்கிறாரே? அதை வெளியிட வேண்டியதுதானே... அதற்கு ஜோசியமும் நல்ல நாளும் பார்க்க வேண்டுமா?' என்று செந்தில்பாலாஜி நக்கல் அடித்ததும் வைரலானது.குறிப்பாக இதுபோன்ற பேச்சு, அவர் தி.மு.கவிலிருந்து விலகப்போகிறார் எனும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது.

இந்த தடலாடி மாற்றம் குறித்து செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம். "முதலமைச்சராக கரூரில் தான் காலடி எடுத்து வைக்கும்போது, செந்தில்பாலாஜி ஜெயிலில் இருக்க வேண்டுமென்று விஜய் உத்தரவிட்டதாக அந்த நேரத்தில் சொல்லப்பட்டது. அதற்கான முயற்சிகளும் நடைபெற்றன. ஆனால், விஜய் கரூருக்கு வருவதற்கு முதல் நாள் குதிரை பேர வழக்கில் செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது. இதனால், போலீஸார் ஏமாற்றம் அடைந்தார்கள். பிறகு டாஸ்மாக் வழக்கில் அவரை கைது செய்ய முயன்றார்கள். அதிலும் அவர் முன்ஜாமின் வாங்கிவிடவே, போலீஸாருக்கு பெருத்த ஏமாற்றம்.

கடந்த திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக செந்தில்பாலாஜி மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்தார். அவர் பதவியில் இல்லாத காலங்களில், ஈரோடு முத்துசாமி மதுவிலக்கு அமைச்சராகவும், சிவசங்கர் மின்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்கள். இதை கணக்கில்கொள்ளாமல் தன்னை மட்டும் குறிவைத்து கைது செய்வது பற்றி டில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களிடம் செந்தில்பாலாஜி ஆலோசனை செய்தார்.

அப்போது கடந்த காலங்களில் மின்வாரியத்திலும் மதுவிலக்கு துறையிலும், டெண்டர் கோரப்பட்டது எப்படி, டெண்டர்கள் யாருக்கு வழங்கப்பட்டன, டாஸ்மாக் கடைகளில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக எத்தனை பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள், இரண்டு துறைகளிலும் நடந்த முறைகேடுகள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த ஐந்து வருட புள்ளி விவரங்களை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பார்த்திருக்கிறார்கள்.

பார்த்துவிட்டு, அரசு எத்தனை வழக்கு போட்டாலும் அத்தனை வழக்கையும் சாதாரணமாக உடைத்துவிடலாம். எப்போதும்போல் உங்கள் அரசியல் அதிரடியை தொடருங்கள்' என்று கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அமைதியில்தான் செந்தில்பாலாஜி அணி மாறுகிறார் என்ற பேச்சு கிளம்பியது.

அதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் சட்டசபையில் தி.மு.க. ஆட்சி சாதனைகளை சொல்லி புகழ்ந்துவிட்டு, ஆளுங்கட்சியினரைப் பார்த்து, 'நீங்க ஒண்ணு பேசுனா, அதுக்கு நாங்க பதில் சொல்லக்கூடாதா? நானும் பேசுவேன்... என்று எகிறினார். அதன் தொடர்ச்சியாகத்தான் 'ஃபைலை ஓபன் பண்ணுங்க' என ஆக்ரோஷமாகப் பேசினார். இதற்குக் காரணம், மின்சாரத் துறை சம்பந்தப்பட்ட ஃபைலில், அதி.மு.க.

ஆட்சியில் நிலக்கரி வாங்கியதில் பல்லாயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது என்று அப்போதைய மின்துறை அமைச்சர் தங்கமணி மீது தி.மு.க. சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பான விவரங்களும் உள்ளன. அந்த விவகாரத்தை தோண்டினால், அதில் பல டெல்லி முக்கியப் புள்ளிகள் பெயர்களும் வெளிச்சத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது.

இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான், தி.மு.க.வை மட்டும் சிக்கவைக்கும் விஜய்யின் திட்டத்தை முறியடிக்கும் விதமாக செந்தில்பாலாஜி, ஃபைலை ஓபன் பண்ணுங்க' என்கிறார். குதிரை பேர வழக்கு டாஸ்மாக் வழக்கு என இரண்டிலுமே முன்ஜாமின் இருப்பதால், இப்போதைக்கு வேறு எந்த வழக்கும் போட முடியாது என்றும் டில்லி சட்டப் புள்ளிகள் உறுதியாகச் சொல்லியிருக்கின்றனர். இதே ஜோரில் கரூர் இடைத்தேர்தலிலும் அதிரடி அரசியல் செய்து ஆளுங்கட்சிக்கு அவர் நிச்சயம் டஃப் கொடுப்பார்." என்றார்.

கரூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை இது தொடர்பாக நாம் சந்தித்து கேட்டபோது, 'இப்போது எதுவும் வேண்டாம், பிறகு விரிவாக பேசுகிறேன்." என்று நழுவினார்.
எந்தப் பொறியிலும் சிக்காத திமிங்கலமா பாலாஜி?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow