online game: ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்? தமிழக அரசு விளக்கம்

இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக,சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Mar 21, 2025 - 17:19
online game: ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்? தமிழக அரசு விளக்கம்
ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குப்படுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14 ஆம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடு விதித்ததையும் எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர்  சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஆன்லைன் விளையாட்டு: 47 பேர் தற்கொலை

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசுத்தரப்பில் வழக்கறிஞர் அரவிந்த் ஶ்ரீவத்சவா பதில்மனு தாக்கல் செய்தார். அதில், ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட பண நஷ்டம் காரணமாக 2019 முதல் 2024 வரை தமிழகத்தில் 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவே ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் விளையாடினால் தூக்கமின்மை பாதிப்பு, உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலேயே ஆதார் கட்டாயமாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை வைத்து சரிபார்க்கும் நடைமுறை கடந்த எட்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாகவும், இதனால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பு இல்லை எனவும் அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உளவியல் நிபுணர்கள் ஆலோசனைப்படியும், அறிவியல் ரீதியான தரவுகளின் அடிப்படையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இதற்கு பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டோர் தரப்பிலிருந்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு இறுதி விசாரணைக்காக மார்ச் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow