தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள்.. சத்ய பிரதா சாகு தகவல்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும்.

Mar 27, 2024 - 20:52
தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள்.. சத்ய பிரதா சாகு தகவல்

தமிழ்நாட்டில் 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் களம் நாடு முழுவதும் சூடி பிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் அதிரடியாக களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டியுடன் பரபரப்பாக உள்ள அரசியல் சூழலில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது. 

இந்த நிலையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் இருப்பதாகவும் இதில்  3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள்  8 ஆயிரத்து 465 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்,  முதல் முறை வாக்காளர்கள் 10 லட்சத்து 90 ஆயிரத்து 574 பேர் உள்ளதாகவும் கூறினார். 

தேர்தல் தொடர்பாக சி-விஜில் செயலி வாயிலாக அளிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சத்ய பிரதா தெரிவித்துள்ளார். தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 33 கோடியே 31 ரூபாய் ரொக்கம் உட்பட  69 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான  பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறையால் 6 கோடியே 51 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 144 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளன எனவும் 45 ஆயிரம் வாக்கு சாவடிகளில்  வெப் கேமரா பொறுத்த உள்ளதாகவும்  கூறினார். வெயில் அதிகமாக இருப்பதால் வாக்காளர்களுக்கு நாற்காலி வசதி,  குடிநீர் வசதி  ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். 

பல திருப்பங்களுக்கு மத்தியில் நடைபெறும் மக்களைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களை யார் தமது பக்கம் இழுப்பார்கள். எவர் கொடி உயரப் பறக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow