அரியானா, ஜம்மு- காஷ்மீரில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி- பிரதமர் மோடி
எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஜம்மு -காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
அரியானா, ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்றது.ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த செப்.18ம் மற்றும் 25, அக்.1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டது. அதன்படி வாக்கு எண்ணிக்கையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி( இண்டியா கூட்டணி) ஆட்சி அமைக்கிறது. மாலை 4 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக் கட்சி 3 இடங்களிலும், மக்கள் மாநாட்டுக் கட்சி, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 1 இடத்திலும், சுயேச்சை 7 இடங்களிலும் முன்னிலை வகித்தது. இதன் மூலம் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி( இண்டியா கூட்டணி)ஆட்சி அமைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளை ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக 29 இடங்களில் முன்னிலை பெற்று 2வது இடம் பிடித்துள்ளது.
இதேபோல் அரியானாவில் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்.5ம் தேதி தேர்தல் நடைபெற்றது.தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வெற்றிக்கு 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. காலையில் தொடர்ந்து முன்னிலை வகித்த காங்கிரஸ் 10 மணிக்கு பிறகு பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மேலும் ஆளும் பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், 6 இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகித்து வருகின்றன. இந்த நிலையில், அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலை அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ பாஜகவுக்கு மீண்டும் தனிப்பெரும்பான்மை வழங்கிய அரியானா மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த வெற்றி, வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி. அரியானா மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து, ஜம்மு காஷ்மீரில் இந்த தேர்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சட்டப்பிரிவு 370 மற்றும் 35(A) நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தேர்தல் நடத்தப்பட்டு அதிக அளவில் வாக்களித்தது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. இதற்காக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன்.ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் செயல்பாடு குறித்து நான் பெருமைப்படுகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஜம்மு -காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். பாஜக தொண்டர்களின் கடின முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். மேலும் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் செயல்திறனை நான் பாராட்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?