தேர்தல் பத்திரம்...சமர்பிக்க கூடுதல் அவகாசம் தேவை - எஸ்.பி.ஐ
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜூன் 30.ம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
உறுதிமொழிப் பத்திரமாக அறியப்படும் தேர்தல் பத்திரத்தை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் இருந்து பெற்று, தான் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் ஒரு குடிமகனோ, நிறுவனமோ நன்கொடை அளிக்கலாம். ரகசியத் தகவல்களாக வைக்கப்படுவதால், இந்நடைமுறை கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, Common cause அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூத் உள்ளிட்டோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இவ்வழக்கு கடந்த மாதம் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியலமைப்புக்கு முரணானது எனவும், தன்னிச்சையான முறையில் அரசியல்கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கருப்புப் பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள் மட்டுமே ஒரே வழி அல்ல எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவித்து, மார்ச் 6ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் எனவும், அதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணையப்பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
What's Your Reaction?