லண்டன் டூ தாராபுரம்... கேப் விடாத விஜய்... கேண்டிடேட்டுக்காக சுடசுச பிரசாரம்..?
முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பணிகளை நிறைவு செய்துவிட்டு அங்கிருந்து நேரடியாக பிரசாரக் களத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு அரசியலில் தவெக முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் கவனம் பெற்றுள்ளன. அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தாராபுரம் தொகுதியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யபாமா தவெக வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அவர், தற்போது தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், தாராபுரத்தில் தனது தேர்தல் பிரசாரத்துக்கு தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் நேரடியாக வர உள்ளதாக சத்யபாமா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அந்த வெற்றியை விஜய்க்கு காணிக்கையாக அளிப்பேன் என நம்பிக்கை தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், தங்களை மக்கள் மாற்றத்துக்கான நம்பிக்கையாக பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், தான் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு வந்த பிறகு கட்சியில் இணைவதற்காகவும் ஆதரவு தெரிவிப்பதற்காகவும் பலர் தாமாக முன்வந்து வருவதாக சத்யபாமா தெரிவித்தார். தவெக தலைமையின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்துப் பேசிய சத்யபாமா, திமுகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக எடுத்த முடிவு தமக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை என்றும், கூட்டணி விவகாரம் மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.
தனது கட்சி மாறுதல் குறித்து எழுந்த விமர்சனங்களையும் சத்யபாமா மறுத்தார். எந்தவிதமான குதிரை பேரமும் நடைபெறவில்லை என்றும், மக்கள் சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்திலேயே தவெகவில் இணைந்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டிய சத்யபாமா, தற்போதைய சூழலில் ஆட்சிக்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருப்பதால் இந்த முறை அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து தொகுதி மக்களை சந்தித்து வருவதாகவும், தங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறிய அவர், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விஜய் நேரடியாக பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.
இதனால், லண்டனில் இருந்து, நேரடியாக தாராபுரம் பிரசாரத்திற்கு விஜய் செல்கிறாரா? அல்லது சென்னை வந்து 2-3 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு தாராபுரம் செல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், விஜய்யின் பிரசாரம் தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் தவெகவுக்கு எந்த அளவுக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?