கூட்டணிப் பெயர் விவகாரம்... திருமாவை எதிர்த்த காங்., IUML! விஜய் எடுத்த முடிவு என்ன?
தவெக தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணியின் பெயரை இறுதி செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணியின் பெயர், செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணிக்கு ‘சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் வைக்க விஜய் தரப்பில் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் மாற்றுக் கருத்தை தெரிவித்ததாக தெரிகிறது. கூட்டணியின் பெயரில் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையையும் சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த வார்த்தை இடம்பெற்றால் அரசியல் சாசன பாதுகாப்பு, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட கூட்டணியின் நிலைப்பாடு தெளிவாக வெளிப்படும் என திருமாவளவன் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கூட்டணியின் பெயரில் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை தேவையில்லை என அவர் தெரிவித்ததாக தெரிகிறது. காங்கிரஸ் தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர், விஜய் முன்மொழிந்த ‘சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரே இருக்கலாம் என தெரிவித்ததாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இரு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்தபோதும், திருமாவளவன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாகவும், இதையடுத்து கூட்டணியின் பெயர் தொடர்பாக விஜய் சமரச முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று, ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்காத சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் கூட்டணியில் இணைய வேண்டும் என விஜய் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
அதேபோல், கூட்டணி ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைப்பது குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை என தகவல்.
இதனால், கூட்டணியின் தலைவராக விஜய் மற்றும் கூட்டணியின் பெயராக ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ ஆகிய இரு விஷயங்கள் மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?