மருத்துவத் தரக்கட்டுப்பாட்டில் 53 மருந்துகள் தோல்வி

இந்திய மருத்துவத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் பரிசோதனையில் பாரசிட்டமால், பான் டி உள்ளிட்ட 53 மருந்துகள் தோல்வியடைந்துள்ளன. 

Sep 26, 2024 - 16:13
மருத்துவத் தரக்கட்டுப்பாட்டில் 53 மருந்துகள் தோல்வி
tablets

மக்கள் அதிகம் பயபடுத்தும் மாத்திரைகளான பாரசிட்டமால் மற்றும் விட்டமின் சத்து மாத்திரைகள் என மொத்தம் 53 மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இல்லை என்று இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மாதங்களில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளின் வழியே இது கண்டறியப்பட்டிருக்கிறது. எந்த மருந்தாக இருந்தாலும் அதற்கு பக்க விளைவுகள் இருப்பதை மாற்றியமைக்க முடியாது. இந்த சூழலில் தரமற்ற மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். 

இந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாரசிடமால், கால்சியம் சத்து மாத்திரைகள், விட்டமின் டி மாத்திரை, உயர் ரத்த அழுத்த மாத்திரைகள், நீரிழிவு மாத்திரைகள் உள்ளிட்ட பல மருந்து மாத்திரைகள் நிர்ணயிக்கப்பட்ட தர அளவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் அவர்களாகவே சந்தையில் விற்பனை செய்யப்படுகிற மாத்திரைகளின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான ஆய்வுகளின் முடிவில் இதனை வெளியிட்டிருக்கிறது. 

விட்டமின் சி, டி3 மாத்திரைகள், ஷெல்கால், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், விட்டமின் சி சாஃப்ட்ஜெல்ஸ், ஆன்டி-ஆசிட் பான்-டி, பாரசிடமால் மாத்திரைகள், நீரிழிவு மாத்திரையான கிளிமிபிரைடு, ரத்த அழுத்த மாத்திரையான டெல்மிசார்டன் போன்ற மக்கள் அதிகம் வாங்கும் மாத்திரைகளே இந்த தரக்கட்டுப்பாட்டுச் சோதனையில் தோல்வி அடைந்துள்ளன. 

சத்து மாத்திரைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஷெல்கால் மாத்திரையும் தோல்வியடைந்திருக்கிறது. இந்த மருந்துகளை ஹெடெரோ டிரக்ஸ், ஆல்கெம் லெபாரடரிஸ், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடட் உள்ளிட்ட பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இது குறித்து உரிய விளக்கம் கேட்டதற்கு அவை பதிலளித்துள்ளன. மருந்து நிறுவனங்கள் அளித்துள்ள பதிலில், “சோதனையில் தோல்வியடைந்த மருந்துகள் தங்களது நிறுவனத்தின் தயாரிப்பு அல்ல என்றும் அவை போலி மருந்துகள் என்றும் கூறியதோடு மேற்படி இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியிருக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow