விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி? சிக்கிலில் செ.பா-வின் தம்பி...
தவெக ஆட்சியை கவிழ்க்க செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் சதிதிட்டம் தீட்டியதாக வெளியாகி இருக்கும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. யார் அந்த மூவர்? விரிவாக பார்ப்போம்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து,திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. மே 10 பதவியேற்ற தவெகவின் ஆட்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ. என். இளையராஜாவிடம் கட்சி மாறுமாறு வலியுறுத்தி ரூ.35 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.இவ்வழக்கில் முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்.இவ்வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் இம்மூவரையும் ஜுலை 15 தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
யார் அந்த மூவர்?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ.வான என். இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் முதலில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சிலரின் பெயர்கள் வெளிவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கரூர் கோதை நகரைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் அதிபன் ரமேஷ் மற்றும் ஈரோடு சாலையில் உணவகம் நடத்தி வரும் கார்த்திக் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளையராஜாவை கைபேசியில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு, தாம் Indian Political Democratic Strategies (IPDS) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய அரசியல் கட்சியின் சார்பில் தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டமன்றத் தேர்தல் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அந்த வாக்கெடுப்பில் ஆதரவு அளித்தால் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் என்றும் இளையராஜாவிடம் ஆசைவார்த்தை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இளையராஜா நிராகரித்ததுடன், மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம் என எச்சரித்ததாகவும், அதன் பின்னரும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. புலனாய்வில், திருநாவுக்கரசு, நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகிய மூவரையும் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.
மேலும், விசாரணையின் போது செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன., செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே இளையராஜாவை தொடர்புகொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?