உதயநிதியின் பதில் அரசியல் முதிர்ச்சியற்றது- இபிஎஸ் காட்டம்
கிழக்கு கடற்கரை சாலையில் திமுகவிற்கு நெருக்கமானவர்கள் வாங்கி குவித்துள்ள நிலங்களின் மதிப்பு கூட வேண்டும் என்பதற்காகத்தான் முட்டுக்காட்டில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு மையத்தை அமைக்கின்றனர்.
ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையிட்டு மரியாதை செலுத்தினார் .கட்சிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிய அவர், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக தொடங்கப்பட்டதுதான் தமிழகம் வளர்ச்சி பெற காரணம். அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுகதான்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தனர். இன்றும் கூட அதி கன மழை பெய்யும் என்றனர். ஆனால் வெயில்தான் பிரகாசமாக அடிக்கிறது. குறைந்த மழைப்பொழிவிலும் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி தத்தளித்தது. மக்கள் பாதிக்கப்படவில்லை என முதல்வர், துணை முதல்வர் பொய்யான தகவலை கூறினர்.
20 செ.மீ மழை பெய்தாலும் கூட ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என முதல்வர், அமைச்சர்கள், சென்னை மேயர் கூறினர். ஆனால் இன்று உண்மை நிலை வெளிவந்துவிட்டது.அதிமுக ஆட்சியில் உலக வங்கி, ஜெர்மன் வங்கி போன்றவற்றிடம் நிதி பெற்று சென்னையில் 2400 கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால் பணி தொடங்கியது. ஆட்சி முடிவுறும்போது 1240 கி.மீ நீளத்திற்கு கால்வாய் பணிகளை நிறைவு செய்தோம்.
எஞ்சிய பணிகளை இந்த ஆட்சியில் நிறைவு செய்யவில்லை. நாங்கள் மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணியை உடனடியாக நிறைவேற்றியிருந்தால் இன்று மழை வெள்ளம் தேங்கி இருக்காது.கூவம், அடையாறில் கரையோரம் இருந்த 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை புதிய கட்டடம் கட்டி வேறு இடங்களுக்கு குடியேற்றினோம். 40 கி.மீ நீளம் கொண்ட 30 நீர் நிலைகளை எங்கள் ஆட்சியில் தொடர்ந்து தூர்வாரினோம். ஆனால் திமுக அரசு நீர்நிலைகளை முறையாக தூர்வாரவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான பரிந்துரைகளை வழங்க திருப்புகழ் கமிட்டியை அமைத்தனர். திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் குறித்தும், அவை நிறைவேற்றப்பட்டனவா என்பது குறித்தும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை.
தற்போது பெய்த மழையில் சென்னையில் வெள்ளநீர் தேங்காததே நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்டதற்கான பதில் என துணை முதல்வர் கூறியது, அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. விளையாட்டுத்தனமாக பேசுகிறார். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.கனமழை தொடர்ந்து பெய்திருந்தால் யாரும் வெளியில் சென்றிருக்க முடியாது. கனமழை இல்லாததால் சென்னையில் வெள்ளநீர் வடிந்துவிட்டது.
அதிமுக ஆட்சியில் இருந்ததுபோல் தற்போதைய அமைச்சர்களிடம் பணிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. அனைத்து அமைச்சர்களின் பணிகளையும் துணை முதலமைச்சரே செய்கிறார்.மாநகரம், மின்சாரம், சுகாதாரம், வருவாய் , பொதுப்பணி , நீர்வளம் என அனைத்து துறைகளின் பணியையும் உதயநிதியே செய்கிறார். மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதியை மட்டும் முன்னிலைப்படுத்துவது ஏன்..?
மற்ற அமைச்சர்களை முன்னிலைப்படுத்தி இருந்தால் வெள்ள நிவாரண பணிகள் விரைவாக முடிந்திருக்கும். திமுவினர் 98 சதவீத வடிகால் பணி நிறைவடைந்ததாக கூறினர். மழைநீர் வடிகால் பணி நிறைவடையாதது குறித்து கேட்டால், இன்றும் சாக்குபோக்குதான் கூறுகின்றனர்.இன்னும் 15..16 மாதம் தான் திமுக ஆட்சி இருக்கிறது. எப்படி புதிய பணிகளை நிறைவேற்றுவார்கள். அடையாறு , கோவளம், கொசஸ்தலை ஆறு வடிகால் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினோம்.
5 ஆண்டு சென்னை மேயராக இருந்து ஸ்டாலின் செய்தது என்ன..? உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதும் மழைநீர் வடிகால் பணிகளை மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை.திருப்புகழ் கமிட்டியின் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அமைச்சர் சேகர்பாபு டீதான் வாங்கி கொடுத்து கொண்டிருக்கிறார். தூய்மைப் பணியாளர்களுக்கு டீ வாங்கி கொடுத்துவிட்டு முதலமைச்சரை அனுப்பி வைக்கும் வேலையை எல்லாம் அதிமுக ஆட்சியில் நாங்கள் செய்ததில்லை.தானே, ஒக்கி, வர்தா, கஜா என பல புயல்களின்போது புயல் போல் பணியாற்றினோம் நாங்கள். பலரின் வயிற்றில் அடித்த அரசுதான் திமுக அரசு. வெறும் டீ வங்கி கொடுப்பதால் மக்களுக்கு பயனில்லை.
அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையே தவறு. அதிமுக பிரியவில்லை. சிலர் நீக்கப்பட்டனர், அவ்வளவுதான். அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்படுவது ஜெயலலிதா காலத்திலேயே இருந்த நடைமுறைதான்.அதிமுக இணைப்பு குறித்து 6 முன்னாள் அமைச்சர்கள் என்னிடம் பேசுவதாக கூறுவது பச்சைப் பொய். கட்சி விரோத நடடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான்.முதலமைச்சரின் தொகுதியில் உள்ள கொளத்தூர் காவல் நிலையத்தில் தண்ணீர் தேங்கியதால் காவலர்கள் காவல் நிலையம் சென்று பணி செய்ய முடியவில்லை.ஆளுநர் செயல்பாடு குறித்து நான் கருத்து கூற முடியாது.
கிழக்கு கடற்கரை சாலையில் திமுகவிற்கு நெருக்கமானவர்கள் வாங்கி குவித்துள்ள நிலங்களின் மதிப்பு கூட வேண்டும் என்பதற்காகத்தான் முட்டுக்காட்டில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு மையத்தை அமைக்கின்றனர். அரசு பணத்தை வீண்டிக்கின்றனர். கலைஞர் பன்னாட்டு மையம் அமைப்பதற்கு தேவையான நிலம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலேயே 16 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது.நகரத்துக்கு வெளியே 40 கி.மீ தூரத்தில் அமைத்தால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?