செந்தில் பாலாஜி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடுது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
உச்சநீதிமன்ற நிபந்தனைகளை மீறினால் செந்தில் பாலாஜி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், சென்னை எம்ஜிஆர் நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தடுமாறி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். பள்ளம் தோண்டப்பட்ட பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது. எனவே அரசு இனி மழைநீர் வடிகால் கால்வாய் தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகில் பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும். அதோடு இந்த சாலை மாணவர்கள், குழந்தைகள், செல்லும் பாதியாக இருப்பதால் இதையெல்லாம் கவனித்துக்கொண்டு அலட்சியமாக இல்லாமல் தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகில் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். மழைநீர் கால்வாய் அமைக்கின்ற பணி மந்தகதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்த துறையின் அமைச்சர், சென்னை மேயர், தமிழக முதல்வர் ஆகியோர் சென்னையில் 90 சதவீத மழைநீர் வடிகால் பணி முடித்ததாக தெரிவித்தனர். இன்று வரை அந்த பணி நிறைவு பெறவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு வடகிழக்கு பருவமழை துவங்க இருக்கின்றன. இனியாவது திமுக அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து வேகமாக துரிதமாக மழைநீர் வடிகால் பணியை நிறைவேற்றப்பட வேண்டும்.
வடகிழக்கு பருவமழையின்போது, கனமழை பொழிந்தால் வடிகால் வசதி முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருந்துவிட்டால், சென்னை மாநகரம் மீண்டும் வெள்ளத்தில் தத்தளிக்கும். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விடுவார்கள். ஆட்சி பொறுப்பேற்று 40 மாத காலமாக மழைநீர் வடிகால் பணியை நிறைவேற்றாமல் இருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமின் வழங்கி இருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுக்கிறார். முதல்வரின் பரிந்துரைப்படி அவர் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனையை காவல்துறை கண்காணித்து நிபந்தனையை மீறினால் நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது .
செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடுது. முதல்வர் யாரை பரிந்துரை செய்தாரோ அவருக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைத்து ஆளுநரின் கடமை. அதிமுக 2ஆகவும், 3 ஆகவும் போகவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூடுதல் வாக்கு பெற்றுள்ளது. கூட்டணி பலம் குறைவாக இருந்த காலத்திலேயே அதிக வாக்குகள் பெற்ற தான் அதிமுக. மேலும் அதிமுக என்பது எங்கள் தரப்பினர் தான், அதிமுக எல்லா அதிகாரம் பெற்று மூன்று தேர்தல் சந்தித்துள்ளோம் என்றார்.
What's Your Reaction?