உ.பியைச் சேர்ந்த இளம் துறவி மீது தாக்குதல்...! பரமக்குடியில் பரபரப்பு...! 

பெண் துறவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Mar 10, 2024 - 18:15
உ.பியைச் சேர்ந்த இளம் துறவி மீது தாக்குதல்...! பரமக்குடியில் பரபரப்பு...! 

அயோத்தியில் இருந்து நடை பயணமாக பரமக்குடி வந்த இளம்பெண் துறவியிடம், அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்து ஷிப்ரா பதக்(38) என்ற பெண் துறவி அவரது  தந்தை மற்றும் சகோதரருடன் ராமேஸ்வரம் நோக்கி தென் மாநிலங்கள் வழியாக நடை பயணமாக வந்தார். அப்போது, மூவரும் சைவ, வைணவ ஆலயங்களையும் வழிபட்டு வந்தனர். அதைதொடர்ந்து, நேற்று சிவராத்திரி என்பதால் அப்பகுதியில் உள்ள  சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் இரவு பரமக்குடியில்  தங்கிவிட்டு இன்று காலை அங்கிருந்து புறப்பட்டனர். ஷிப்ரா பதக் வழக்கம்போல் நடைபயணமாக சென்று கொண்டிருந்தார். இவர்களின் கார் உடமைகளுடன் பின்னால் வந்து கொண்டிருந்தது. 

அப்போது பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி இடையே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த அடையாளம் தெரியாத 8 நபர்கள் காரை நிறுத்தி இளம்துறவியை வம்பிழுத்தனர். அப்போது சகோதரனும், தந்தையும் தட்டிக்கேட்க அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சண்டையிட்டு கார் கண்ணாடிகளை உடைத்தனர். இச்சம்பவத்தில் இளம் பெண் துறவியின் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் பதற்றமடைந்த ஷிப்ரா பதக் உடனடியாக பரமக்குடி காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பரமக்குடி போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் காரில் வந்த நபர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண் துறவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow