கட்டுமான பணியின் போது மண் சரிவு - புதைந்த வடமாநிலத்தவர்கள்...ஒருவர் பலி...
உதகை மரவியல் பூங்கா அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 2 பேர் மண் சரிவில் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உதகை மரவியல் பூங்கா அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 2 பேர் மண் சரிவில் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உதகையில் மண் சரிவு ஏற்படுவது இயல்பான ஒன்றாக கருதப்பட்டாலும், கடந்த மாதம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 6 பெண் தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் உதகை மரவியல் பூங்கா அருகில், தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 30 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டுவதற்கான கட்டுமானப் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. அந்தப் பணியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த மண் சரிவில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், மண் சரிவில் சிக்கிய இரண்டு பேரையும் அரை மணி நேரம் முயற்சி செய்து மீட்டனர். ஆனால் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதிக்கு நீலகிரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உதகை நகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கட்டுமானப் பணிக்கு முறையான அனுமதி பெறாமல் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
What's Your Reaction?