போலி ஆவணம் தந்து வீட்டுமனை விற்ற மோசடி நபர் கைது
போலியான ஆவணங்கள் வாயிலாக நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
போலி ஆவணம் தயாரித்து வேறொருவர் மனையை 99 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கே.கே. நகர் 9வது செக்ட்டாரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (31). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டுமனை வாங்க முயற்சித்த போது, சிந்துஜா ரியல் எஸ்டேட் நடத்திவரும் பண்பரசன் (53) என்ற இடை தரகருடன் பழக்கம் ஏற்பட்டது.
பண்பரசன் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், செந்தூர புரத்தில் கல்யாணி என்பவரின் 2350 சதுர அடி நிலத்தின் அசல் பத்திரம் தன்னிடம் இருப்பதாக கூறி அந்த இடத்திற்கு ரூ.99 லட்சத்திற்கு விலை பேசியுள்ளார்.
அதன்படி பண்பரசன் இரண்டு தவணைகளில் ஸ்ரீனிவாசனிடம் 99 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு, போலியான ஆவணங்கள் வாயிலாக நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
ஸ்ரீனிவாசன் நிலத்தை சென்று பார்த்தபோது, நிலத்தின் உரிமையாளர் கல்யாணி, நிலத்தை யாருக்கும் விற்கவில்லை என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீனிவாசன் கடந்த ஆண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இது குறித்து விசாரித்த போலீசார், தலைமறைவாக இருந்த மாங்காடு பரணிபுதூரைச் சேர்ந்த பண்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?