பார்ட் டைம் ஜாப் தேடிய பேராசிரியர்... ஆன்லைனில் 17 லட்சம் அபேஸ்... சேலத்தில் இருவரை தூக்கிய சைபர் கிரைம்...
ஆன்லைன் மூலம் பார்ட் டைம் ஜாப் தேடிய ஈரோட்டை சேர்ந்த கல்லூரி பேராசிரியரிடம், 17 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த சேலத்தை சேர்ந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீப காலமாக ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் நல்ல லாபம், வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்ற இதுபோன்ற மோசடி விளம்பர வலையில் சிக்குவதும், லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதும், காவல்துறையின் விழிப்புணர்வையும் தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வேலைவாய்ப்பின்மை மற்றும் தேவைக்கு ஏற்ற ஊதியம் இல்லாதது போன்ற விஷயங்களால் பகுதி நேர வேலை தேடும் இளைஞர்களை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல்கள், அவர்களை மூலைச்சலவை செய்து, லட்சக்கணக்கில் பணம் பறித்துக்கொண்டு கம்பி நீட்டுகின்றனர்.
அதேபோல் ஈரோட்டில் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு கம்பி நீட்ட முயன்ற இருவரை சைபர் கிரைம் போலீஸ் கம்பிக்குள் அடைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர், கூடுதல் வருமானத்திற்காக டெலிகிராம் செயலி மூலம் வேலைக்காக தேடி உள்ளார். அப்போது அதில் வந்த லிங்க் ஒன்றை க்ளிக் செய்து வீடியோவை பார்த்தால் பணம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதைப்பார்த்த அவரது வங்கிக்கணக்குக்கு 500 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் வீடியோ பார்ப்பதற்கு கூடுதலாக பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர், உடனடியாக தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு சிறிது சிறிதாக ரூபாய் 17 லட்சம் வரை அவரது வங்கிக் கணக்கில் இருந்து மாயமாகி உள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேராசிரியர், அந்த லிங்க் குறித்தும், தான் ஏமாற்றபட்டது குறித்தும், உடனடியாக ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான தனிப்படை போலீசார், ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, பணம் செலுத்தப்பட்ட வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் எண், டவர் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு வகையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிக்கிய சேலத்தை சேர்ந்த நந்தகோபாலன், சாமிநாதன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோல ஏராளமான நபர்களிடம் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 7 செல்போன்கள், 19 ATM கார்டுகள், 8 சிம்கார்டுகள், 15 செக் புக்குகள் மற்றும் ATM Swiping Machine உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆன்லைனில் இதுபோன்ற மோசடி வலையில் சிக்காமல், கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தும் வகையில், சைபர் கிரைம் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வேலை தேடும் இளைஞர்கள் தங்களுக்கு வரும் விளம்பரங்கள் மற்றும் வேலை வாய்ப்பு செய்தி ஆகியவற்றின் உண்மை தன்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்றும், அதனை தவிர்ப்பது நல்லது எனவும் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், ஆன்லைனில் பண மோசடி செய்யப்படுவதாக உணரும் போது, சைபர் கிரைம் காவல்துறையை, செல்போன், இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அணுகி உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?