பிள்ளை வரம் தரும் காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா.. நாளை திருக்கல்யாணம்.. 21ல் மாங்கனி இறைத்தல்

பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் இன்று தொடங்குகிறது. நாளைய தினம் திருக்கல்யாணம் நடைபெறும் வரும் 21ஆம் தேதி மாங்கனி இறைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது

Jun 19, 2024 - 10:19
பிள்ளை வரம் தரும் காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா.. நாளை திருக்கல்யாணம்.. 21ல் மாங்கனி இறைத்தல்


63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும், காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா நடைபெறும். அதன்படி நிகழாண்டு விழா இன்று (ஜூன் 19) மாலை ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பரமதத்த செட்டியாரை அம்மையார் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரும் (மாப்பிள்ளை அழைப்பு) வைபவத்துடன் தொடங்குகிறது.

நாளைய தினம் (ஜூன் 20) காலை 7.35 மணிக்கு புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு வருதல், 8 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்துக்கு வருதல், காலை 11 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு, இரவு 10 மணிக்கு பரமதத்த செட்டியாரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் திருவீதியுலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் நிகழ்வும் பவழக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா புறப்பாடும் 21ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும்.

அன்று மாலை 6 மணிக்கு அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைத்தல், இரவு 11 மணிக்கு பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோயிலில் பரமதத்தருக்கு 2வது திருமணம் நடைபெறும். 22ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். ஜூலை 21-ம் தேதி விடையாற்றி உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.

பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் ஆகியவை செய்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow