விஜயகாந்தை கண்டதும் கண்ணீர்விட்ட தொண்டர்கள்
காரில் அழைத்து வரப்பட்ட விஜயகாந்தை கண்டதும் தேமுதிக பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்
சென்னையில் நடந்த தேமுதிகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்தை கண்ட தொண்டர்கள் கண்ணீர் விட்டனர்.
தேமுதிகவின் 18வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஒரு தனியார் திருமண்டபத்தில் நடைப்பெற்றது.இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
பொதுக்குழு மேடைக்கு விஜயகாந்த் வந்தபோது தொண்டர்கள் ஆரவாரம் செய்து கரகோஷங்களை எழுப்பினர்.பின்னர் கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக கட்சியின் பொருளாளராக இருந்த பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்தபோது அவர் உடல் நலம் பெற வேண்டி பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் கூட்டணி அமைப்பது ,தேர்தல் வியூகம் அமைப்பது போன்ற முடிவுகளை எடுப்பதற்கு விஜயகாந்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.இவ்வாறு 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக காரில் அழைத்து வரப்பட்ட விஜயகாந்தை கண்டதும் தேமுதிக பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் பொதுவெளியில் தோன்றியதால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
What's Your Reaction?