கோயில் நிர்வாகிகளை கொல்ல முயற்சி... 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை.. ஹைகோர்ட் அதிரடி

கரூர் மாவட்டம் அச்சமாபுரத்தில் கோயில் நிர்வாகிகளை கொலை செய்ய முயன்ற வழக்கில், 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Apr 24, 2024 - 17:26
கோயில் நிர்வாகிகளை கொல்ல முயற்சி... 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை.. ஹைகோர்ட் அதிரடி

அச்சமாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, இந்த கோயிலுக்காக  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பொறுப்பேற்றனர். அப்போது, பழைய நிர்வாகிகளுக்கும், புதிய நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியுள்ளது.

 

இந்த மோதலில், அச்சமாபுரத்தை சேர்ந்த அசோக், சுகுமார், மணிவண்ணன் இதயகனி மற்றும் மாரியாயி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாங்கல் காவல்நிலையத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

 

இந்த புகாரின் பேரில், அரங்கநாதன்பேட்டையை சேர்ந்த வேலுசாமி, பெரியசாமி, விக்னேஷ், முத்தமிழ்செல்வன், முருகன் மற்றும் சரவணன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கானது கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2022ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். 

 

இந்நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுகுமார் என்பவர், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

 

இந்த மனுவானது, நீதிபதி ராமகிருஷ்ணன் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட வேலுசாமி, பெரியசாமி, விக்னேஷ், முத்தமிழ்செல்வன், முருகன் மற்றும் சரவணன் ஆகிய 6 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow