வாட்ஸ்ஆப்பில் வந்த வீடியோ கால்- டிஜிட்டல் கைது முறையில் ரூ.71 லட்சம் பணம் பறிப்பு!

வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பில் மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஒரு சிபிஐ அதிகாரி என்று கூறிக்கொண்டு, மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்தாரருக்கு எதிராக பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளார்.

Mar 6, 2025 - 14:40
Mar 6, 2025 - 14:42
வாட்ஸ்ஆப்பில் வந்த வீடியோ கால்- டிஜிட்டல் கைது முறையில் ரூ.71 லட்சம் பணம் பறிப்பு!
Digital arrest crime

17.12.2024 அன்று திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் டிஜிட்டல் கைது தொடர்பான மோசடியால் பாதிக்கப்பட்டு ரூ.71,00,000/- அளவிலான தொகையினை இழந்துள்ளதாக தேசிய சைபர் குற்றப் புகார் வலைதளத்தில் (NCRP Portal) புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், புலன் விசாரணையில் ஈடுபட்ட திருவள்ளுர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் சூரத் நகரத்தைச் சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

மோசடியால் பாதிக்கப்பட்ட நபருக்கு 13.12.2024 அன்று காலை 10:06 மணியளவில் ஒரு வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதில், மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஒரு சிபிஐ அதிகாரி என்று கூறிக்கொண்டு, மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்தாரருக்கு எதிராக பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக புகார்தாரர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

ரூ.71 லட்சம் மோசடி:

மோசடியில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் புகார்தாரரிடம் கைது செய்யப்படுவதை தவிர்க்க வேண்டுமானால் அவர்களது அறிவுறுத்தலின்படி செயல்படுமாறு புகார் தாரரை வற்புறுத்தியுள்ளதோடு, புகார்தாரரின் பணத்தினை மேற்படி குற்றவாளிகளால் வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றுமாறும் கூறியுள்ளனர். மேலும், மாற்றப்படும் தொகை ரிசர்வ் வங்கியால் சரிபார்க்கப்படும் என்றும், சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும் புகார்தாரரின் வங்கி கணக்கிற்குத் திருப்பி வரவு வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பி புகார்தாரரும் ரூ.71,00,000/- தொகையை மோசடி நபர்களால் வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

NCRP வலைத்தளத்தில் புகார்:

அதனை தொடர்ந்து புகார்தாரரால் மேற்படி மோசடி நபர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. இறுதியில், தான் சைபர் குற்றவாளிகளின் டிஜிட்டல் கைது தொடர்பான மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த புகார்தாரர் இழந்த பணத்தினை மீட்டுத்தருவதற்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகள் வேண்டி தேசிய இணையவழி குற்றப் புகார் வலைதளத்தில் (NCRP Portal) புகார் அளித்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் திருவள்ளுர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் புகார்தாரர் இழந்த ரூ.71,00,000/-முழுத்தொகையும் குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியை சேர்ந்த குற்றவாளியின் கணக்கிற்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டதோடு, மேற்படி குற்றவாளிகளை கைது செய்வதற்கென திருவள்ளுர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவானது நேரடியாக சூரத்துக்குச் சென்று முதன்மை கணக்கு வைத்திருந்த முதன்மை மற்றும் உடந்தை குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட முதன்மை குற்றவாளியின் வங்கி கணக்கு எண்ணானது இந்தியா முழுவதும் உள்ள 9 பிற வழக்குகளுடன் தொடர்புடையது என்பது புலன் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முதன்மை குற்றவாளியான A1-சோஜித்ரா ஹிரென்(வயது 26) மற்றும் உடந்தை குற்றவாளியான A2- ரோகாட் மீட்குமார் (வயது 30) ஆகியோர் திருவள்ளுர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருவள்ளுர் இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகளால் குற்றவாளிகளின் வங்கி கணக்கிலிருந்த தொகை ரூ.5,66,872/- முடக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, புகார்தாரரிடம் மோசடி செய்யப்பட்ட தொகையினையும் திருப்பி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புகாரளித்தல்:

இதுபோன்ற இணையவழி குற்ற மோசடிகளுக்கு நீங்கள் ஆளாக நேரிட்டால், சைபர் கிரைம் பிரிவின் கட்டணமில்லா உதவி எண்ணான 1930 என்ற எண்ணை அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்கிற இணையதளத்தின் வாயிலாகவும் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.

Read more:

ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு? இழுத்து மூடுங்க.. இராமதாசு காட்டம்

மகளிருக்கு மாதம் ரூ.2500: சொன்னது என்னாச்சு? அனல் பறக்கும் டெல்லி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow