நிலம் வரன்முறைக்கு லஞ்சம் பெற்ற உதவியாளர்.. பூவிருந்தவல்லியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ்

பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலம் வரன்முறை செய்ய 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்ற  ஊராட்சி ஒன்றிய குழு தலைவரின் தனி உதவியாளர் உட்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். 

Apr 13, 2024 - 13:00
நிலம் வரன்முறைக்கு லஞ்சம் பெற்ற உதவியாளர்.. பூவிருந்தவல்லியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ்

சென்னை ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு சொந்தமான நிலம் பூவிருந்தவல்லி ஒன்றியம் ஆயில்சேரி ஊராட்சியில் உள்ளது. நிலத்தை வரன்முறை செய்ய பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இளையராஜா அணுகியபோது ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரின் தனி உதவியாளர் கிரிதரன் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டுமென வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சியடைந்த நில உரிமையாளர் இளையராஜா, லஞ்சம் கொடுக்க பிடிக்காமல் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்சம் வாங்குபவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இளையராஜாவிடம் அதிகாரிகள் கொடுத்துள்ளனர். 

அந்த பணத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இளையராஜா கொண்டு சென்றுள்ளார். அப்போது ஒன்றிய குழு தலைவரின் உதவியாளர் கிரிதரன் தான் அலுவலகத்தில் இல்லாததால் நிலம் மற்றும் கட்டிட அமைப்பு பிரிவு உதவியாளர் தியாகராஜனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். 

இதையடுத்து ரசாயனம் தடவிய 20 ஆயிரம் பணத்தை இளையராஜாவிடமிருந்து தியாகராஜன் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயகுமாரின் தனி உதவியாளர் கிரிதரனையும் கைது செய்தனர்.

ஜெயகுமார் கூறியதின் பேரிலேயே கிரிதரன் லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுவதால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் சிஎம்டிஏ  அனுமதி இல்லாமல் விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்டு வருவதாக எழுந்த புகாரில் கடந்த ஒராண்டாக பர்மிட் புக் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து கடந்த மாதம் தான் மீண்டும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow