பாஜகவில் இணைந்தது இதற்குதான்! விஜயதரணி விளக்கம்..

Feb 24, 2024 - 17:17
Feb 24, 2024 - 17:44
பாஜகவில் இணைந்தது இதற்குதான்! விஜயதரணி விளக்கம்..

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பல்வேறு உட்கட்சி பூசல் நிலவி வந்த நிலையில், கட்சியில் தனக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை எனக்கூறி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியான விஜயதரணி,1987-ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் காங்கிரசில் இணைந்தார். 25 வயது வரை இளைஞர் காங்கிரசில் தீவிரமாக செயல்பட்ட அவர், பின்னர் காங்கிரசு கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார். 

பின்னர் நளினி சிதம்பரத்திடம் ஜூனியராக இருந்து, வழக்கறிஞரான விஜயதரணி, கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில், 2011-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சட்டப்பேரவைக்கு சென்றார். 

பின்னர் கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக இருந்து வந்த விஜயதரணி தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்றே கூறலாம். கன்னியாகுமரி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவை அடுத்து மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது போட்டியிட வேண்டும் என முயற்சித்தார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் அன்று முதல் கட்சி தலைமை மீது அதிருப்தியின் காரணமாக விஜயதரணி  தீவிர அரசியிலில் ஒதுங்கி இருந்தார். 

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இந்த முறை தனக்குச் சீட்டு வழங்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் விஜயதரணி கட் அன் ரைட்டாக கூறி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், திமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுமா? அப்படியே வழங்கினாலும் விஜயதரணிக்கு அந்த சீட்டு வழங்கப்படுமா? என்பது சந்தேகமாகவே இருந்தது. 

இதனால் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை மீது விஜயதரணி அதிருப்தியில் இருப்பதாகவும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே அவர் பாஜகவுக்கு மாறப் போகிறார் என்ற தகவல்களும் பரவின. இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை பதவியேற்றார். தொடர்ந்து விஜயதரணி பாஜகவில் இணைவது குறித்து விளக்கம் அளித்த செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியில் 3 முறை எம்.எல்.ஏ, சட்டமன்ற கொறடா என பல்வேறு பதவிகளை வகித்துவந்த விஜயதரணிக்கு மேலும் பல பொறுப்புகள் வழங்க இருப்பதாகவும், தங்களது எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு விலைபோக மாட்டார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் சென்ற விஜயதரணி, பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது அருண் சிங், எல்.முருகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து விஜயதரணியை வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி, சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன், தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பாஜகவில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மற்றும்  திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன் எனவும் தெரிவித்த விஜயதரணி,  தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் படிக்க :

https://kumudam.com/BJP-will-grow-with-Vijayatharani---Annamalai-Hope

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow