Vijay Antony: இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் கணவன், மனைவி மாதிரி... டீல் செய்த விஜய் ஆண்டனி!
இசையமைப்பாளர், பாடலாசிரியர் உறவு என்பது கணவன் மனைவி மாதிரி என விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை: சுக்ரன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இசையில் 90ஸ் கிட்ஸையும் 2கே கிட்ஸையும் ஒரே புள்ளியில் இணைக்கும் வித்தையை சரியாக கற்றுக்கொண்டவர்களில் விஜய் ஆண்டனி மிக முக்கியமானவர். புரியாத வார்த்தைகளை வைத்துக்கொண்டே சூப்பர் பாடல்களை கொடுப்பதில் ஜகஜால கில்லாடி. ஒருகட்டத்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி, இப்போது டைரக்டர், புரொடியூசர், எடிட்டர் என ஆல் ரவுண்டராக மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ திரைப்படம் வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளியாகிறது. விஜய் மில்டன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய் ஆண்டனி, மியூசிக் காப்பி ரைட்ஸ் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த சில தினங்களாகவே இசை பெரிதா, பாடல் வரிகள் பெரிதா என்ற பஞ்சாயத்து கோலிவுட்டை திணறடித்து வருகிறது. இசை தான் பெரிது என இளையராஜா தொடங்கிவைத்த இந்த பஞ்சாயத்தில் வாண்டடாக வந்து கருத்து சொன்னார் கவிப்பேரரசு வைரமுத்து.
இதற்காக இசைஞானி இளையராஜாவை மறைமுகமாக அஞ்ஞானி எனவும் விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து கங்கை அமரனும் தன் பங்கிற்கு வைரமுத்துவுக்கு பதிலடி கொடுக்க, இன்னும் இது முடிவுக்கு வராமல் இடியாப்ப சிக்கலாக நீடிக்கிறது. இதனால் விஜய் ஆண்டனி மூலம் இதற்கு தீர்வு காண நினைத்த சினிமா செய்தியாளர்கள், மழை பிடிக்காத மனிதன் டீசர் வெளியீட்டு விழாவில் இதுபற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி, இசையமைப்பாளர், பாடலாசிரியர் உறவு என்பது கணவன், மனைவி மாதிரி. அதில் ஈகோ கூடாது, வெற்றிக்கு இரண்டுபேருமே சேர்ந்து பயணிக்கணும். சில சமயம் அதில் டைவர்ஸ் ஏற்படும் என அசால்ட்டாக டீல் செய்துவிட்டார்.
அதோடு காப்பி ரைட்ஸ் பிரச்சினை பற்றியும் விஜய் ஆண்டனியிடம் கேட்கப்பட்டது. அதற்கும் விளக்கம் கொடுத்த அவர், இசையமைப்பாளர்களிடம் உரிமை இருந்தல் அதற்கு ராயல்டி கேட்பதில் தவறில்லை. சில படங்களின் பாடல்களுக்கான காப்பி ரைட்ஸ் தயாரிப்பாளரிடம் இருக்கும். அப்படி இருக்கும் போது அதற்கான உரிமையை இசையமைப்பாளர் கேட்க முடியாது. மஞ்சும்மல் பாய்ஸ் விவகாரத்தில், கண்மணி அன்போடு பாடல் உரிமை இளையராஜா சாரிடம் இருக்கலாம், அதனால் தான் உரிமை கேட்டுள்ளார் என நினைப்பதாகக் கூறினார். அதேபோல், ரஜினியின் கூலி டைட்டில் டீசரில் தனது பாடலை பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் விஜய் ஆண்டனி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?