குடி என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும் என எதிர்பார்க்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

பார்களில் விட்டு செல்லப்பட்ட பாட்டில்களுக்கு உரிமை கோர முடியாது

Dec 14, 2023 - 15:35
Dec 15, 2023 - 17:31
குடி என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும் என எதிர்பார்க்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

குடி என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும், அதன் மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என டாஸ்மாக் மதுபான நிறுவனம் மற்றும் பார் ஒப்பந்ததாரர்கள் என யாரும் எதிர்பார்க்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வனப்பாதுகாப்பு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம்,  காலி மது பாட்டில்களை விவசாய நிலம், நீர் நிலைகள், குப்பைத் தொட்டிகள், திறந்தவெளி நிலம், பாசன கால்வாய்களில் வீசப்படுவதை தடுக்கும் வகையில், மதுபானத்தை பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, காலி பாட்டிலை திருப்பி கொடுத்தால் அந்த தொகையை திருப்பி கொடுக்கலாம் என உத்தரவிட்டது.

 அதன்படி நீலகிரி, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த திட்டம் முன்னோடி திட்டமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பிப் பெறப்படும் பாட்டில்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்த ஒப்பந்த காலம் 2024 ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை ஒட்டிய பார்களுக்கான டெண்டர் கோரப்பட்டதில், காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் திண்பண்டங்கள் விற்பனை செய்வதற்கான "ஒப்பந்தம்" என குறிப்பிடப்பட்டு இருந்ததால், அந்த டெண்டரை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.

டாஸ்மாக் மதுபானக் கடைகளால் திரும்பப் பெறப்பட்ட காலி மதுபாட்டில்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி  அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர்கள் அருண் அன்புமணி, ஆர்.சந்திரசேகரன் ஆகியோரும் அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கே.சதீஷ்குமார் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக டெண்டர் அமைந்துள்ளதாகவும், மதுபான கடைகளில் இருந்து பாட்டில்களை வாங்க தங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பார் இல்லாத இடங்களிலும் புதிய டெண்டர் கோரப்பட்டதால் தங்கள் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதால், இது தங்களின் நியாயமான எதிர்பார்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், மதுபான கடைகளில் திரும்பப் பெறப்பட்ட பாட்டில்களை கொள்முதல் செய்யவே மனுதாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பார்களில் விட்டு செல்லப்பட்ட பாட்டில்களுக்கு உரிமை கோர முடியாது என்றும், மனுதாரர்கள் உரிமை பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பார்களுக்கான புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டாலும், மதுபான கடைகளில் திரும்பப்பெறப்படும் பாட்டில்கள் மனுதாரர்களுக்கு தான் கிடைக்கும் என்பதால், அரசின் டெண்டர் செல்லும், டெண்டர் நடைமுறைகளை அரசு தொடரலாம் எனக் கூறி, வழக்குகளை முடித்துவைத்தனர்.

அதேசமயம், நியாயமான எதிர்பார்ப்பு என மனுதாரர் கேட்கமுடியாது என தெரிவித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்தால், மனுதாரர்கள் நியாயமான எதிர்பார்ப்பு என உரிமை கோர முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

குடி என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும், அதன் மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என மனுதாரர்கள், பார் ஒப்பந்ததாரர்கள், டாஸ்மாக் நிர்வாகம் என யாரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்க முடியாது என்றும் உத்தரவில்  நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். பார்களில் சேகரிக்கப்படும் காலி மதுபாட்டில்களை திரும்பக் கொடுக்கும்போது, அதற்கான பத்து ரூபாய் தற்போது ரொக்கமாக கொடுப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இனி சம்பந்தப்பட்ட பாரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow