நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் திடீரென அறுந்த வடம்.. அபசகுணமா?..திருநெல்வேலி மக்கள் அச்சம்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் வடம் அறுந்து பக்தர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jun 21, 2024 - 12:39
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் திடீரென அறுந்த வடம்.. அபசகுணமா?..திருநெல்வேலி மக்கள் அச்சம்

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழாவை ஒட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் வடம் அறுந்த சம்பவம் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 3முறை திருத்தேர் வடம் அறுந்து விழுந்ததால் இது அபசகுணமாக இருக்கலாம் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர். 

திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி நெல்லையப்பர் ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடைபெறும். நெல்லுக்கு வேலியிட்ட விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அது போல ஆனி மாதத்தில் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.  

இந்நிலையில் தான் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு தினமும் காலை, மாலை வேளைகளில் அம்பாள் வீதியுலா நடந்தது. இந்த நிலையில் தான் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. நெல்லையப்பர் கோவில் தேர் என்பது தமிழ்நாட்டின் 3வது பெரிய தேராகும். 450 டன் எடையுடன் 70 அடி உயரத்தில் இந்த தேர் இருக்கிறது. 518 ஆண்டுகளாக தேரோட்டம் நடந்து வருகிறது. 

இந்நிலையில் தான் இன்று தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர். தேரோட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் திடீரென வடம் அறுந்தது.இதனால் பக்தர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பக்தர்கள் சுதாரித்த நிலையில் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.  அதன்பிறகு அறுந்த வடம் மாற்றப்பட்டு மீண்டும் தேரோட்டம் தொடங்கியது. பொதுவாக தேர்திருவிழாவுக்கு முன்பாக தேர் ஆய்வு செய்யப்படும்.

ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது சரிசெய்யப்பட்ட பிறகு தான் தேரோட்டம் நடத்தப்படும். அதேபோல் இந்த முறையும் தேர், தேரோட்டத்துக்கான வடம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் திடீரென்று வடம் அறுந்து உள்ளதால் இது அபசகுனமா? இருக்கலாம் பக்தர்கள் கருத்து கூறினர். தேரினை இழுக்கும் முன்பாகவே வடக்கயிறு அறுந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடமும், கோவில் நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் தேரோட்டம் தான் திருநெல்வேலியை வீரத்தின் அடையாளமாக காட்டுகிறது. இன்றும் நெல்லை மாவட்ட மக்கள் ஆனித்திருவிழா என்று சொல்ல மாட்டார்கள். ஆனித் தேரோட்டம் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் மிகப் பிரபலமானது.

இன்று தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும்.திருவாரூர் தேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரும் சென்ற நூற்றாண்டில்தான் செய்யப்பட்டன. ஆனால் நெல்லைத் தேர் 1505 ல் செய்யப்பட்டு இன்று வரை ஓடிவரும் தேர் எனும் பெருமைக்குரியது. 500 ஆண்டு காலத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த தேர்த் திருவிழாவில் இதுவரை வடம் அறுபட்டதில்லை.இந்த நிலையில் இன்றைய தினம் நெல்லையப்பர் கோவிலின் திருத்தேர் வடம் அறுந்து பக்தர்கள் காயமடைந்தது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தேர் கிளம்பும் நிலையில் அடுத்தடுத்து நிகழும் அசம்பாவிதங்களில் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு இயற்கை பேரிடர் அல்லது பெரிய அளவில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தேர் சக்கரம் பள்ளத்தில் சிக்கிய போது அடை மிதிப்பான் குளம் குவாரியில் நான்கு பேர் பலியானார். சென்ற வருடம் தேரை திருப்ப பயன்படுத்தப்படும் தடி உடைந்த நிலையில் மாவட்ட முழுவதும் வெள்ளம் வந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இந்த வருடம் தேரின் 4 வடங்களில் மூன்று முறை அறுபட்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே கோவில் திருவிழாக்களில் அசாம்பவித சம்பவங்கள் நிகழ்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2021ஆம்  ஆண்டு ஜூன் 3ஆம் தேதியன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கருவறை மேற்கூரை, பூஜை பொருட்கள் எரிந்து நாசமாகின அப்போதே அது அபசகுனமாகப் பார்க்கப்பட்டது.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சப்பர ஊர்வலத்தின் போது நிகழ்ந்த தீ விபத்தில்  12 பேர் உயிரிழந்தனர். ஊர்வலம் முடிந்து வளைவில் திரும்பும் போது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சப்பரம் உரசியதில்  மின்சாரம் பாய்ந்து 12 பேர் உயிரிழந்தனர் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow