"பஞ்சு மிட்டாய் சாப்பிட்டா குஷ்டம் வரும்; முதலமைச்சர் கருணாநிதிக்கு எச்சரிக்கை" வழக்கம் போல் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்...
பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் குஷ்டம் வரும் என திண்டுக்கல் சீனிவாசன் உளறல்
திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உளறல் பேச்சால் பொதுமக்கள் பாதியிலேயே கலைந்து சென்றனர்.
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசும் போதெல்லாம் எதையாவது மாற்றி மாற்றி பேசி, உளறி பிரபலமாகி உள்ளார். குறிப்பாக 2017-ல் துணை முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். பிரதமர் மோடியை சந்தித்ததை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திததாகவும், மற்றொரு முறை பிரதமர் நரசிம்மராவை சந்தித்ததாகவும் உளறினார். அதே வருஷம், ஈஷா யோகா மையம் நிகழ்ச்சியில் பேசியபோது, பாடகி சுதா ரகுநாதனை, பரதநாட்டிய கலைஞர் என்று கூறினார். 2019-ல் எம்ஜிஆர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வாஜ்பாய் அறிவித்திருக்கிறார். இது அருமையான பட்ஜெட் சொல்லி ஷாக் கொடுத்தார்.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல்லை அடுத்த என்.ஜி.ஓ காலனியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என சொல்வதற்கு பதில், மதுவிலக்கை ரத்து செய்வோம் என கூறினார்.
பஞ்சு மிட்டாய் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன கலவையை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் எனக் கூறி தடை விதித்த தமிழக அரசின் செயல் பாராட்டுக்குரிய விஷயமாகும் என்று கூறிய சீனிவாசன், பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் குஷ்டம் வரும் என உளறினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு கேன்சர் வரும் என்று கூறினார்.
மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் இல்லை என்றால், வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் தங்களது சக்தி என்னவென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி முதலமைச்சர் கருணாநிதிக்கு எச்சரிப்பதாக உளறினார். இதனால் பொதுக்கூட்டத்தில் அமர்ந்திருந்த அதிமுகவினரை தலையை சொரிந்தனர்.
What's Your Reaction?