பிரதமர் படத்துடன் வந்த விளம்பரம்.... ரூ.2,997 பணத்தை இழந்த ஜவுளி வியாபாரி..!

மோசடி குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Feb 29, 2024 - 16:29
பிரதமர் படத்துடன் வந்த விளம்பரம்.... ரூ.2,997 பணத்தை இழந்த ஜவுளி வியாபாரி..!

பேஸ்புக்கில் பிரதமர் படத்துடன் வந்த மோசடி விளம்பரத்தை நம்பி ஜவுளி வியாபாரி ஒருவர் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த தளத்தில் பதிவு செய்தால் இலவசமாகப் பணம் கிடைக்கும், ரீசார்ஜ் கிடைக்கும் என வரும் விளம்பரங்களை நம்பாதீர்கள் என்றும் தொடர்ந்து காவல்துறையும், ரிசர்வ் வங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. என்னதான் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், ஏமாறுபவர்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதே இல்லை.இதேபோலத்தான் தூத்துக்குடியில் ஜவுளி வியாபாரி ஒருவர் பிரதமரின் படத்துடன் வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவர்  வேல்பாண்டி. வேலை நேரம் போக அவர் தனது பொழுதைக் கழிக்க பேஸ்புக், இன்ஸ்டா என ஒரு ரவுண்டு வருவார். கடந்த 28-ம் தேதி இரவு பேஸ்புக்கில் உலவிக்கொண்டிருந்த அவரை பிரதமர் படத்துடன் வந்த விளம்பரம் ஒன்று கவர்ந்துள்ளது. அதில், பாரத் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்து, அதுவும் இலவசமாக. 

சும்மா வரும் பணத்தை ஏன் விட வேண்டும் எண்ணத்தை வரவழைத்தது அவரின் பேராசை. அந்த விளம்பரத்தைத் கிளிக் செய்துள்ளார். அப்போது, இதோ உங்கள் பரிசு என ஒரு சிறிய பெட்டி வர அதையும் கிளிக் செய்துள்ளார். அப்போது, உங்கள் செல்போன் எண்ணிற்கு வந்துள்ள ஓடிபியை பதிவிடச் சொல்ல. சற்றும் யோசிக்காமல்  ஓடிபியை பதிவிட்டுள்ளார். இதையடுத்து உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது, வங்கி கணக்கைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என வந்ததை நம்பி, அவரது வங்கிக் கணக்கைக் கொடுக்க, எஸ்.எம்.எஸ் ஒன்று வந்ததுள்ளது.

ஆனால், வேல்பாண்டி நினைத்தது போல், அது பணம் வந்ததற்கான எஸ்.எம்.எஸ் அல்ல, அவரது வாங்கி கணக்கிலிருந்து ரூ.2,997 எடுக்கப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ். அதன் பிறகே அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து, அவர் இந்த மோசடி குறித்து தான் வங்கி கணக்கு வைத்துள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்றும், காவல்நிலையத்திற்கு சென்றும் புகார் அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow