புதுச்சேரி: வாய்க்காலில் சிக்கிய 3 அடி நீளமுள்ள முதலை
முதலையை பார்ப்பதற்காக பாலம் மீது ஏராளமான பொதுமக்கள் கூடியதால், சத்தம் கேட்டு முதலை தண்ணீருக்குள் மூழ்கி மாயமானது
புதுச்சேரி காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்காலில் 16 மணி நேரமாக ஆட்டம் காட்டிய 3 அடி நீளமுள்ள முதலை வனத்துறையினர் வைத்த கூண்டில் நள்ளிரவு சிக்கியது.
புதுச்சேரி காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கம் அருகே உள்ள உப்பனாறு வாய்க்காலின் பாலம் கீழ் பகுதியில் நேற்று காலை 3 அடி நீளமுள்ள முதலை குட்டி ஒன்றை பொதுமக்கள் பார்த்தனர்.சிலர் முதலையை மொபைலில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இதனால், முதலையை பார்ப்பதற்காக பாலம் மீது ஏராளமான பொதுமக்கள் கூடியதால், சத்தம் கேட்டு முதலை தண்ணீருக்குள் மூழ்கி மாயமானது.தொடர்ந்து முதலை இருக்கும் தகவல் காட்டு தீ போல் புதுச்சேரி எங்கும் பரவிய நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் முதலையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
முன்னதாக வாய்க்காலை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் முதலை ஏறி உள்ளதா? என தேடிப்பார்த்தனர்.பின்னர் முதலை தென்பட்ட பகுதியைச் சுற்றி வேலி அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் முதலை சிக்காமல் தொடர்ந்து ஆட்டம் காட்டியது.
எனவே முதலையைப் பிடிக்க கோழிக்கறி வைத்து கூண்டு அமைத்து பொறி வைத்தனர்.பதினாறு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து வனத்துறை துறையினரிடம் ஆட்டம் காட்டிய முதலை நள்ளிரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
பிடிபட்ட முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக வனத்துறையினர் கொண்டு சென்றனர்.புதுச்சேரியில் மூன்றடி நீளம் உள்ள குட்டி முதலை தொடர்ந்து பிடிப்படாமல் ஆட்டம் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-பி.கோவிந்தராஜு
What's Your Reaction?