இ.பி.எஸ்., அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முதலமைச்சர்... சூடுபிடிக்கும் போதைப் பொருள் கடத்தல் வழக்கு....

Mar 14, 2024 - 13:03
இ.பி.எஸ்., அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முதலமைச்சர்... சூடுபிடிக்கும் போதைப் பொருள் கடத்தல் வழக்கு....

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி  அவதூறு கருத்து தெரிவித்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் நடத்தி அதிரடி சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மூளையாக செயல்பட்டதாக திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக், தலைமறைவாக இருந்த நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார். 

இந்நிலையில் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக, கடந்த 8ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்திப் பேசியிருந்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி  அவரது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். 

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய இருவர் மீதும் கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow